Published:Updated:

`சிசிடிவி காட்சிகள் பொய் சொல்லாது’ - ஜாமியா நூலகத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸ் #Video

ஜாமியா நூலகம்
ஜாமியா நூலகம்

ஜாமியா நூலகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின் போது சாலையில் இருந்த பேருந்துகள் தீவைக்கப்பட்டன. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியிருந்தனர். காவல்துறையின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜாமியா பல்கலைக்கழத்தில் பேருந்துக்குத் தீ வைக்கும் போலீஸ்
ஜாமியா பல்கலைக்கழத்தில் பேருந்துக்குத் தீ வைக்கும் போலீஸ்

ஜாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் , ``கலவரத்துக்கு மாணவர்கள் காரணமில்லை. டெல்லி காவல்துறை மாணவர்கள் மீது குற்றம்சாட்டக்கூடாது. காவல்துறையினர் எந்தவித முன்அனுமதியும் இல்லாமல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தார்கள். நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார். பேருந்துக்கு போலீஸாரே தீவைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

`யார் அந்த ரெட் டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ்?' - ஜாமியா வன்முறையில் சிக்கிய 10 ரவுடிகள்! #CAA

இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஜாமியா நூலகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. MEHFIL-E-JAMIA என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய கொடூரமான தாக்குதல் தொடர்பாக எக்ஸ்க்ளூசிவ் வீடியோ. நூலகத்தில் டிசம்பர் 15-ம் தேதி பதிவான வீடியோ. 2 மாதங்களுக்கு முன்பு நாங்கள் காயமடைந்தோம். `நாங்கள் நூலகத்துக்குள் நுழையவில்லை. யாரையும் தாக்கவில்லை என போலீஸார் கூறினார்களே? இந்த வீடியோவில் இருக்கும் போலீஸாரைக் கைது செய்யுங்கள். சிசிடிவி காட்சிகள் பொய் சொல்லாது” எனப் பதிவிட்டுள்ளனர்.

45 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நூலகத்தில் இருக்கும் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்துகின்றனர். இந்த வீடியோ தொடர்பாக சிலர் சமூகவலைதளத்தில் கேள்வியெழுப்பியுள்ளனர். `நூலகத்தில் படிக்கும் மாணவர்கள் ஏன் முகமூடி அணிந்துள்ளனர். அந்த வீடியோவில் மாணவர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். ஏன் அவர்கள் போலீஸாரைக் கண்டதும் படிப்பதுபோல் அமருகின்றனர். நாங்கள் போலீஸாருக்கு ஆதரவாக இல்லை. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. முழு காணொலியையும் வெளியிடுங்கள். அப்போதுதான் உண்மை தெரியவரும்’ என அந்த வீடியோவுக்குக் கீழே கமென்ட் செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தியால் முகமூடி அணிந்திருப்பதாகச் சிலர் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ இப்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு