Published:Updated:

`கலவரத்துக்குக் காரணமே, டெல்லி காவல்துறை மட்டும்தான்!' - கொதிக்கும் ஜாமியா பல்கலைக்கழக துணைவேந்தர்

நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள்தான் பெரும்பாலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

டெல்லி போராட்டம் - ஜாமியா
டெல்லி போராட்டம் - ஜாமியா

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. தலைநகர் டெல்லியின் சராய் ஜூலேனா பகுதியிலும் இதற்கு எதிராக நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தைக் கலைக்க போலீஸாரே பேருந்துகளுக்குத் தீ வைக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவின. மேலும், போராட்டத்தை ஒடுக்க வலுக்கட்டாயமாக ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.

தெற்கு டெல்லியின் முக்கியப் பகுதிகளான ஆர்.கே.புரம், முனிர்கா உள்ளிட்ட ஏரியாக்களின் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இரவு பத்து மணிக்குப் பிறகு பல்கலைக்கழகத்தின் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

நஜ்மா அக்தர்
நஜ்மா அக்தர்

ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு ஆதரவாக பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் டெல்லி காவல்துறை தலைமைச் செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்கினார்கள். மும்பை, கேரளா, ஹைதராபாத் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் களமிறங்கினர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர் நள்ளிரவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கலவரத்தில் பல மாணவர்கள் காயமடைந்தனர். கலவரம் ஏற்படுத்திய பாதிப்பால் தற்போது பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையே, ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய ஜாமியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நஜ்மா அக்தர், `` கலவரத்துக்குக் காரணம் முழுக்க முழுக்க போலீஸ்தான்" என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கலவரத்துக்கு எந்த வகையிலும் எங்கள் மாணவர்கள் காரணமில்லை. அதனால் டெல்லி காவல்துறை மாணவர்கள் மீது குற்றம்சாட்டக் கூடாது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது மதச்சாயமும் பூசக் கூடாது.

டெல்லி போலீஸார்
டெல்லி போலீஸார்
ANI

காவல்துறைதான் எவ்வித முன்அனுமதியும் இல்லாமல் எங்களது பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தார்கள். நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள்தான் பெரும்பாலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையால் ஏற்பட்ட சேதாரங்களுக்கு என்ன பதில்.. அவர்களால், மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில்?

இதுவரைக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். போலீஸின் இந்தத் தாக்குதல் குறித்து நீதிமன்ற விசாரணை தேவை. மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமை. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் பேச உள்ளோம். எங்களின் மாணவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்" என்று கூறியிருக்கிறார்.