Published:Updated:

கட்டிமுடிக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் - ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காத அரசு!

ஜெயலலிதா நினைவிடம்
ஜெயலலிதா நினைவிடம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கட்டிமுடிக்கப்படி திறக்கப்பட உள்ள நிலையில், அந்த நினைவிடத்துக்கான நிலுவைத் தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 79 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தில் நடைபெற்று வரும் கடைசிக் கட்ட பணிகளை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஜெயலலிதா நினைவிடம் வரைபடம்
ஜெயலலிதா நினைவிடம் வரைபடம்

நினைவிடத் திறப்புவிழாவுக்கான கடைசிக்கட்ட ஏற்பாடுகள் மும்மரமாக நடந்துவரும் நிலையில், நினைவிடத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு கோடிக்கும் மேல் பணத்தைக் கொடுக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, ஜெயலலிதாவின் நினைவிடம் முன்பாக பணம் கொடுக்காமல் அலைக்கழிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீதி கேட்கும் நிகழ்வு நடைபெறவிருந்தது. அப்போது, நினைவிடத்துக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் வந்ததால் அவர்களைக் காவலர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்

அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள், பின்னர் எழிலக வளாகத்துக்கு வந்து, தங்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், ``இந்த நினைவிடம் கட்டுவதில் எங்களின் பங்கும் இருக்கிறது. இந்த ஒப்பந்தப் பணியில் ஈடுபட NSK டிரான்ஸ்போர்ட், பாலாஜி, பிரகாஷ் கிரேன் போன்ற ஏழு நிறுவனங்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமாகத் தொகை கொடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது" என்று கூறினார்.

Vikatan

தொடர்ந்து பேசிய அவர், ``இதுகுறித்து ஒப்பந்ததாரரான கிருஷ்ணாமுர்த்தியிடம் கேட்கும்போது, அரசு தரப்பிலிருந்து பணம் வரவில்லை என்று கூறுகிறார். அதோடு, அரசு தரப்பில் பணம் கொடுப்பதற்கு கமிஷன் கேட்பதாகவும், அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் தரப்பில் சொல்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடப் பணிகளில் கமிஷன் கேட்பது மிகவும் வருத்தமாக உள்ளது. அந்த ஒப்பந்ததாரர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கிறார். எங்களுக்கான பணம் கொடுத்த பிறகுதான், நினைவிடம் திறக்கப்படவேண்டும். இதுகுறித்து ஆளுநரிடம் புகார் மனு வழங்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

யுவராஜ்
யுவராஜ்

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அரசு தரப்பு அதிகாரியிடம் பேசியபோது,`` சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களைக் கூப்பிட்டுப் பேசிவிட்டோம். நேற்றே சில ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமிருப்பவர்களுக்கும் இன்று நிலுவைத் தொகையைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. அனைவருக்கும் நிலுவைத் தொகை விரைந்து கொடுக்கப்படும்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு