Published:Updated:

`அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்கக்கூடாதா?’- பத்திரிகையாளர் அன்பழகன் விவகாரத்தில் பபாசி சொல்வதென்ன?

பத்திரிகையாளர் அன்பழகன்மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் திடீரென கைது செய்யப்பட்டார். மேலும், அவர்மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதியப்பட்டன.

பத்திரிகையாளர் அன்பழகன்
பத்திரிகையாளர் அன்பழகன் ( twitter )

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தார் மூத்த பத்திரிகையாளரும் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளருமான வி.அன்பழகன். இதற்கிடையே, இவரது அரங்கில் தமிழக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்கப்பட்டதாகவும், அதை விற்கக் கூடாது எனத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சொல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்னையில் பத்திரிகையாளர் அன்பழகன்மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் திடீரென கைது செய்யப்பட்டார். மேலும், அவர்மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குகள் பதியப்பட்டன.

சென்னைப் புத்தகக் கண்காட்சி!
சென்னைப் புத்தகக் கண்காட்சி!

தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அ.தி.மு.க அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் மக்கள் செய்தி மையம் அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

கண்டங்களுக்கு இடையே, அன்பழகனின் கடைக்குத் தடை விதித்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உத்தரவு பிறப்பித்துடன், ``புத்தகக் காட்சிக்கு அரங்கம் விண்ணப்பிக்கும் போது பபாசியின் விதிகளுக்கு உட்படுவதாக நீங்கள் ஒப்புக்கொண்டு விண்ணப்பித்துள்ளீர்கள். ஆனால் அரசுக்கு எதிராக நீங்கள் உங்கள் கடையில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்பது விதிமீறலாகும். எனவே, நீங்கள் புத்தகக் காட்சியில் கலந்துகொள்வதை தடை செய்கிறோம். உடனே கடையை அகற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அறிய சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழனைத் தொடர்புகொண்டு பேசினோம். அதில், ``மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை முறையாகப் பதிவு செய்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதோடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக நிறைய ஆவணங்கள் பெற்று அரசின் ஊழல்களை தொடர்ந்து புத்தகமாக வெளியிட்டு வருகிறார். தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளின் ஆட்சிகளில் நடந்த ஊழல்களை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சித் துறையில் நடைபெறும் ஊழல்தொடர்பாக அவர் சமீபகாலமாகப் புத்தகங்கள் அதிகமாக வெளியிட ஆரம்பித்தது முதலே அந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் இவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

ஏற்கெனவே 26 வழக்குகள் அவர்மீது போடப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் குண்டர் சட்டத்திலும் 130 நாள்கள் சிறையில் இருந்துள்ளார். நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வருடம் ஒரு தொகையைக் கட்டி புத்தகக் கண்காட்சி அரங்கை வாங்கியுள்ளார். அரங்கு வாங்கும்போது புத்தகத்தின் பட்டியலை கண்காட்சி நிர்வாகிகள் கேட்டுள்ளனர் என்றும், அதைக் கொடுத்ததாகவும் அன்பழகன் கூறுகிறார்.

பிரஸ் கிளப்
பிரஸ் கிளப்
twitter

அதில் அ.தி.மு.க அரசின் ஊழல் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, நேற்று முன்தினம் அன்பழகனின் அரங்கை மூடச்சொல்லி புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் கூறியுள்ளனர். எதற்காக என்று கேட்டபோதுதான் அ.தி.மு.க அரசின் ஊழல் புத்தகங்கள் இடம்பெற்றதையும், இதை விற்கக் கூடாது என்றுதான் அவரது கடையைக் காலி செய்யச் சொல்லி இருக்கின்றனர்.

இதைக் கடிதமாக அன்பழகன் கேட்க, கடிதமாகக் கொடுத்தவுடன் நேற்று முன்தினம் இரவே தனது அரங்கை காலி செய்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு முழுமுழுக்கப் பொய்யான வழக்கைப் பதிவு செய்துள்ளனர். முதலில் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், இரும்புத் தடியால் தாக்க முயன்றார் என்றும் வழக்கு கொடுத்துள்ளனர். மாஜிஸ்திரேட் இரும்புக் கம்பியை எடுத்துவரச் சொல்லியபோது, அரசு தரப்பு மரச் சக்கையை எடுத்துவந்து கொடுத்துள்ளனர். உள்ளாட்சித் துறை ஊழலை அம்பலப்படுத்தியதாலே இப்படி பொய் வழக்கு போட்டிருக்கின்றனர். பொங்கல் விடுமுறை வரும் இந்த நேரத்தில் அன்பழகனைப் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டே இப்படிப் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

பபாசியின் செயல் கேவலமான ஒன்று. புத்தங்கள் விற்கக் கூடாது என்றால் நீதிமன்றம் சென்றிருக்கலாம். அதை விடுத்து கிரிமினல் வழக்கு போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. பபாசி போன்ற அமைப்பு பொய்ப் புகாரைக் கொடுத்துள்ளதும், ஒரு பதிப்பாளரைக் கண்காட்சியிலிருந்து வெளியேறச் சொன்னதும் புத்தகக் கண்காட்சியின் நோக்கத்துக்கே எதிரானது. இது முற்றிலும் ஏற்புடையது இல்லை" என்றவரிடம், ``பபாசியின் விதிகளில் அரசுக்கு எதிராகப் புத்தகங்கள் விற்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாக'' கண்காட்சி நிர்வாகிகள் கூறியுள்ள புகார் குறித்து கேட்டோம்.

``அந்த விதிகளை நானும் வாங்கிப் பார்த்தேன். அதில் அப்படி எதுவும் சொல்லவில்லை. புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிராகவோ, கொள்கைகளுக்கு எதிராகவோ ஒரு புத்தகம் கூட இல்லை என்பதை பபாசியால் உறுதிப்படுத்த முடியுமா.

பத்திரிகையாளர் அன்பழகன்
பத்திரிகையாளர் அன்பழகன்
twitter

தி.மு.க ஆட்சியிலும் அன்பழகன் இதேபோன்று செய்துள்ளார். இரண்டு கட்சிக்கு எதிராகவும் அவர் எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது பபாசி செய்தது மிகப்பெரிய இழுக்கு. இந்த நடவடிக்கையைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த ஆண்டில் மட்டும் பத்திரிகையாளர்கள் மீது இந்த அரசு போட்டுள்ள இரண்டாவது வழக்கு இது. இன்று பத்திரிகையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கன்னியாகுமரியில் நிருபர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு, அன்பழகன் மீதான வழக்கு குறித்து கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாரதிதமிழன் குற்றச்சாட்டுத் தொடர்பாக பபாசியின் தலைவர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ``புத்தகம் வெளியிடுவதை அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது என்பதை எப்போதும் கண்டிப்பாகச் சொல்லி வருகிறோம். ஆனால் அதைமீறி சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி அன்றைக்கு அன்பழகன் எதோ புத்தகத்தை வெளியிட முயற்சி செய்திருக்கிறார். அனுமதியில்லாமல் வெளியிடக் கூடாது என்று அவரிடம் நிர்வாகிகள் போய் சொன்னபோது மிக மோசமாக திட்டி அனுப்பியிருக்கிறார் அன்பழகன். அதன்பின் ஆபீஸில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது கடையைக் காலி செய்துவிடுகிறேன் என்று சொன்னவர் சிறிதுநேரத்தில் மீண்டும் நிர்வாகிகளை கேவலமாகத் திட்டியுள்ளார். அவர் பேசுவதை எல்லாம் கேட்டால் அவ்வளவுதான். நிர்வாகிகளின் குடும்பம்வரை அவர் மோசமாகப் பேசினார். அதன்பின் செயலாளர் முருகனை, கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் மிரட்டியுள்ளார். இதனால்தான் அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள போலீஸில் புகார் கொடுத்தார்.

`அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்கக்கூடாதா?’- பத்திரிகையாளர் அன்பழகன் விவகாரத்தில் பபாசி சொல்வதென்ன?

கண்காட்சியின் ஆரம்பத்திலேயே பிரச்னை செய்துள்ளார் அன்பழகன். புத்தகக் கண்காட்சியில் கடைகள் போடுவதற்கு உறுப்பினர்களுக்குதான் முன்னுரிமை. ஆனால், இவர் கண்காட்சியில் கடை வாங்குவதற்காக நிறைய பிரச்னைகள் செய்தார். பத்திரிகையாளர் என்ற அடிப்படையில்தான் அவருக்குக் கடை ஒதுக்கீடு செய்தோம். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்திவிட்டார்" என்பவரிடம், ``பபாசியின் விதிகளில் அரசுக்கு எதிராகப் புத்தகங்கள் விற்கக்கூடாது'' என்று கூறியுள்ளீர்களே என்ற கேள்வியைக் கேட்டோம். ``புத்தகக் கண்காட்சி என்பது அரசு வேண்டிய, எதிர்த் தரப்பு என அனைவரும் வரக்கூடிய இடம். இந்தக் கண்காட்சிக்காக விரும்பியோ, விரும்பாவிட்டாலும் அரசை நம்பித்தான் சில விஷயங்களைச் செய்து வருகிறோம்.

பொதுவாகவே அரசுக்கு எதிராக மட்டுமல்ல; பபாசியைப் பாதிக்கத்தக்க எந்த விஷயங்களையும் கண்காட்சியில் செய்யக் கூடாது என்பதுதான் விதி. இதுபோல் 21 விதிகளைப் போட்டிருக்கிறோம். இதுபோன்ற நடவடிக்கையை முதல் முறை அல்ல; இதற்கு முன்பும் எடுத்துள்ளது.

கண்காட்சியின் உறுப்பினர்கள் 400 பேரின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம். 45 வருடமாக இதை நடத்தி வருகிறோம். 22 பேர் அரங்கம் அமைத்துக் கண்காட்சி நடத்திய இடத்தில் இன்றைக்கு 800 பேர் அரங்கம் அமைக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறோம். இது ஒண்ணும் இரும்புவியாபாரம் கிடையாது. இங்கு இல்லாவிட்டால் வேறு எங்காவது போய்விற்றுக்கொள்ளலாம் என்பதற்கு. இதை எல்லாம் மனதில் வைத்து நடவடிக்கை எடுத்தோம். யார்மீது தனிப்பட்ட வெறுப்பு எங்களுக்கு இல்லை" என்றார்.