Election bannerElection banner
Published:Updated:

`வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசியது யார்?!' - கல்வித் தொலைக்காட்சியை கதிகலக்கிய சர்ச்சை

காவி உடையில் வள்ளுவர்
காவி உடையில் வள்ளுவர்

`வள்ளுவருக்கு காவி வண்ணத்தை வேண்டுமென்றே பூசினார்களா எனத் தெரியவில்லை. அந்தப் பாடப்பகுதியில் திருக்குறள் வந்ததால், அதற்குத் தோதாக வள்ளுவர் படத்தை பேக்கிரவுண்ட்டில் வைத்துவிட்டார்கள்'.

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசப்பட்ட சம்பவம், அரசியல் கட்சிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ` ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலிருந்து வந்த வீடியோவைச் சரிபார்க்காமல் ஒளிபரப்பியதன் விளைவு இது' என்கின்றனர் பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில்.

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை

கொரோனா ஊரடங்கு காலத்தில், மாணவர்களுக்குச் சிறப்பான கல்வியைக் கொண்டு சேர்த்ததில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்குப் பெரிய பங்கு உண்டு. `ஆண்ட்ராய்டு போன் வசதியில்லாத குறையை அரசின் கல்வித் தொலைக்காட்சி போக்கியது' எனப் பெரும்பாலான பெற்றோர் உற்சாகப்பட்டனர். ஒவ்வொரு பாடப்பகுதிக்கும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு எளிதாகப் புரியும்வகையில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒளிபரப்பு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதிகாரிகள், இது தொடர்பாக தனியார் சேட்டிலைட் சேனல் நிர்வாகங்களிடம் நேரடியாகப் பேசி, இதைப் பரவலாகக் கொண்டு சென்றனர். இந்தநிலையில், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடப்பகுதி ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

`மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்!' -வெங்கய்ய நாயுடு ட்வீட்டால் சர்ச்சை

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பொருளியல் என்ற பிரிவில் வெளியான திருக்குறளுக்கு வள்ளுவரின் படத்தை பேக்கிரவுண்டில் சேர்த்திருந்தனர். அதில், வள்ளுவருக்கு திருநீறு பூசி, காவி உடை வரையப்பட்டிருந்ததுதான் சர்ச்சைக்கு மூல காரணம். இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ` பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கல்வித் தொலைக்காட்சியில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் இழிசெயலில் பள்ளிக்கல்வித் துறையும் இறங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்ற மனித சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவருக்கு, பிறப்பினில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வகையில் காவி வண்ணம் பூசுவதை இன உணர்வு கொண்ட தமிழ் மக்களால் சகிக்க முடியாது. உடனடியாக தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் அதை மாற்றி அமைக்க வேண்டும்' என்றார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும், ` பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும் கல்வித் தொலைக்காட்சியில் அய்யன் வள்ளுவருக்குக் காவி உடை தரித்து அவருக்குக் `காவி வண்ணம்’ பூசும் கைங்கர்யத்தைப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சி செய்து, இளம் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்ப் பற்றும் மான உணர்வும்மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது. வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்!' -வெங்கய்ய நாயுடு ட்வீட்டால் சர்ச்சை

`உண்மையில் என்ன நடந்தது' என பள்ளிக் கல்வித்துறையின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். `` ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலுள்ள பொருளியல் பகுதிக்கான வீடியோ வடிவத்தை வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன (DIET) ஆசிரியர்கள் தயாரித்திருக்கிறார்கள். அவர்கள், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வகையில் பாடத்தை எடிட் செய்து அனுப்பியிருக்கிறார்கள். டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம் என்பதால், அன்று ஒளிபரப்ப வேண்டாம் என தனியார் சேனல் நிர்வாகங்களிடம் தெரிவித்திருந்தோம். அதையும் மீறி ஒரே ஒரு தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பாகிவிட்டது. அதிலுள்ள வள்ளுவர் படத்தை எடுத்து சர்ச்சையை ஏற்படுத்திவிட்டனர்" என விவரித்தவர்,

கல்வி தொலைக்காட்சி
கல்வி தொலைக்காட்சி

`` வள்ளுவருக்கு காவி வண்ணத்தை வேண்டுமென்றே பூசினார்களா எனத் தெரியவில்லை. அந்தப் பாடப்பகுதியில் திருக்குறள் வந்ததால், அதற்குத் தோதாக வள்ளுவர் படத்தை பேக்கிரவுண்டில் வைத்துவிட்டார்கள். இதை மனிதத் தவறாகவே பார்க்கிறோம். இந்த விவகாரம் சர்ச்சையானதும், உடனே சம்பந்தப்பட்ட பகுதியை வீடியோவிலிருந்து நீக்கிவிட்டோம். இதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை நாங்களும் உணர்கிறோம். இப்போது இதை வரிந்து கட்டிக்கொண்டு முன்னிலைப்படுத்துகிறவர்கள், தங்களது சொந்த வாழ்விலும் வள்ளுவம் சொல்கிற வழியில் நடந்துகொள்கிறார்களா என்ன?

கொரோனா தொற்று பரவலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வித் தொலைக்காட்சியை சிறப்பாக நடத்திவருகிறோம். கல்வித் தொலைக்காட்சிக்கு என சிறப்பான உபகரண வசதிகள் எதுவும் கிடையாது. இருப்பினும், எந்த மாநிலமும் செய்யாததை கொரோனா காலத்தில் செய்துவருகிறோம். வள்ளுவருக்கு காவி வண்ணம் பூசப்பட்ட விவகாரத்தில் உள்நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் செயல்பட்டிருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக, அந்த ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவிருக்கிறது" என்றார் உறுதியாக.

இதுதொடர்பாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு