`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா..!'- 16 நிமிடங்கள் கெஞ்சிய காஞ்சி இளைஞர்; கைவிட்ட 108

`தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த நிலையில் 108 நிர்வாகத்தினர் அலட்சியமாக நடந்துகொண்டதால், நாங்கள் கணேஷ்குமாரை இழந்துவிட்டோம்'.
காஞ்சிபுரம் பகுதியில் உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவர் ஒருவர் உயிர் போகும் நிலையில் `அவசர எண் 108’க்குத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியமாகப் பதில் அளித்துவிட்டு துண்டித்துவிட்டதால் பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்தார். மாணவர் இறந்து நான்கு நாளான நிலையில், அவர் இறப்பதற்குக் கடைசி சில நிமிடங்களுக்கு முன்பு தன்னைக் காப்பாற்றச் சொல்லி 108க்கு போன் செய்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிக்கும் நடராஜ் என்பவரின் மகன் கணேஷ்குமார். கல்லூரி மாணவரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றிருக்கிறார். மாலை வரை கிரிக்கெட் விளையாடி முடித்ததும் தண்ணீர் குடிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே கணேஷ்குமார் இறந்துவிட்டார். சிறிது நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கணேஷ்குமார், சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த அவரின் குடும்பத்தினர் கணேஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் இறந்து அரைமணிநேரம் ஆனதாக மருத்துவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கணேஷ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்தநிலையில், பெற்றோர்கள் அவரின் செல்போன் பதிவுகளைப் பார்த்தனர். கணேஷ் கடைசியாக யாரையெல்லாம் அழைத்துப் பேசி இருக்கிறார் என அழைப்பு விவரங்களைப் பார்த்தபோது 108க்கு போன் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்போனில் உள்ள கால் ரெக்கார்டை கேட்டிருக்கிறார்கள். அப்போது, உயிருக்குப் போராடும் நிலையில் கணேஷ் குமார் பதற்றத்துடன் பேசும் ஆடியோவைக் கேட்டு அதிர்ந்துள்ளனர்.

அந்த ஆடியோ பதிவு இங்கே…
``நான் பச்சையப்பன் ஸ்கூல் கிட்ட இருக்கிறேண்ணா… மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா…“
``பக்கத்தில் இருக்கிறவங்க யாரிடமாவது கொடுங்க….”
``யாருமே இல்லைண்ணா... கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா… முடியலண்ணா…”
``சீக்கிரம்னா எங்கிருந்து வருவது…? நீங்க எங்க இருக்கீங்கன்னு தெளிவா சொல்லுங்க… பயப்படாதீங்க… பக்கத்துல இருக்கறவங்க கிட்ட கொடுங்க…. பக்கத்துல யாருமே இருக்கமாட்டாங்களா?”
``யாருமே இல்லைண்ணா…“
“பச்சையப்பாஸ் ஸ்கூல்… மூங்கில் மண்டபம்ணா..”
“எங்கிருக்கிறது?“
“காஞ்சிபுரம்ணா… கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா…“
“பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட கொடுங்க“
“யாருமே இல்லைண்ணா…”
“நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்கன்னு பார்க்கனும்… டக்குன்னு நடந்துபோய் யாரையாவது கால்பண்ணச் சொல்லுங்க…“
இப்படியாக முடிகிறது அந்த ஆடியோ.
கணேஷ்குமார் பெற்றோர்கள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கணேஷுக்கு சுவாசக் கோளாறு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அதற்குச் சிகிச்சை எடுத்து வந்தான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று பிரச்னை ஏற்பட்டபோது, அவனே 108க்கு அவனே போன் செய்து மருத்துவமனைக்குத் தனியாகச் சென்று சிகிச்சை எடுத்திருக்கிறான். தற்போது விளையாடப் போனபோது திரும்பவும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், 108க்கு போன் செய்து அவன் இருக்கும் இடத்தை தெளிவாகச் சொல்லி இருக்கிறான். மேலும், பக்கத்தில் யாரும் இல்லை என்பதையும் அவர்களிடம் சொல்லி இருக்கிறான்.

`என்னைக் காப்பாற்றுங்க' எனக் கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் பேசி அங்கேயே உயிரை விட்டிருக்கிறான். பொதுமக்கள் சொல்லித்தான் அவன் உயிரிழந்தது எங்களுக்குத் தெரிந்தது. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த நிலையில் 108 நிர்வாகத்தினர் அலட்சியமாக நடந்துகொண்டதால், நாங்கள் கணேஷ்குமாரை இழந்துவிட்டோம். இனி யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது” என்கிறார்கள் ஆதங்கமாக.
காஞ்சிபுரம் மாவட்ட `அவசர எண் 108’ மாவட்ட மேலாண்மை அலுவலர் செல்வமணியிடம் பேசினோம். ``சென்னை கால் சென்டரில் இருப்பவர்களுக்குச் சரியான இடம் தெரியப்படுத்த முடியாததால், இதுபோன்று சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். பிளே ஸ்டோரில் `அவசரம் 108’ செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தால் ஆபத்தில் உள்ளவர்கள் இருப்பிடத்தை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்து கொள்ளமுடியும். இதற்கான விழிப்புணர்வை நாங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.” என்கிறார்.