Published:Updated:

`உணவுப் பொருள்களைக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது?’ - நகராட்சி கமிஷனர் செயலால் கொதித்த கனிமொழி

கனிமொழி
கனிமொழி

``எளியவர்களிடம் மட்டுமே அதிகாரக் கரங்கள் அத்துமீறுகின்றன. வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஊரடங்கு விதிகளை மீறி சில வியாபாரிகள் கடைகளைத் திறந்தும் தள்ளுவண்டியிலும் வியாபாரம் செய்தனர். அப்போது ஆய்வுக்குச் சென்ற வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ் கடையிலிருந்த பழக் கூடைகளையும் காய்கறிக் கூடைகளையும் கீழே சாய்த்துவிட்டார். அதோடு நிற்காமல், பழங்களோடு இருந்த தள்ளுவண்டியைக் குப்புறக் கவிழ்த்து வியாபாரிகளை எச்சரித்தார். கமிஷனரின் இந்த இரக்கமற்றச் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

மன்னிப்பு கேட்டு நிவாரணம் வழங்கிய நகராட்சி கமிஷனர்
மன்னிப்பு கேட்டு நிவாரணம் வழங்கிய நகராட்சி கமிஷனர்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ், ‘‘நான், வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் அப்படிச் செயல்பட நேர்ந்தது. வியாபாரிகளைக் கஷ்டப்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை. தவற்றை உணர்ந்துவிட்டேன். என்னுடைய செயலால் வியாபாரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று விளக்கம் கொடுத்திருந்தார். எனினும், அவர் மீதான கொந்தளிப்பு தணியவில்லை.

இதுதொடர்பாக, தி.மு.க மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள பதிவில்,``நகராட்சி கமிஷனரின் மனிதத் தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா..? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருள்களைக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா உட்பட பல தலைவர்களும் கமிஷனரின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கனிமொழியின் கண்டன பதிவு
கனிமொழியின் கண்டன பதிவு

இதனிடையே, நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ் இன்று காலை வாரச்சந்தைப் பகுதிக்கு நேரில் சென்று, வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்தார். சாய்க்கப்பட்ட தள்ளுவண்டியின் பெண் வியாபாரியை அழைத்து சால்வை அணிவித்து நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு வருமாறு அழைப்பு வந்தது. இதையடுத்து, கமிஷனர் சிசில் தாமஸும் சென்னை சென்றுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு