Published:Updated:

`டெல்லி வன்முறை சர்ச்சை!' -பா.ஜ.க கபில் மிஸ்ராவுக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா

டெல்லியில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தவர் என்று கபில் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு உண்டு.

டெல்லியில், வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தவர் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கபில் மிஸ்ராவுக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் போராட்டம் நடைபெற்ற போது, வன்முறை வெடித்தது. வன்முறையில் 42 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

டெல்லியில் கலவரம் வெடிக்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்புப் பேச்சு காரணமென்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் ஹூசைன்தான் காரணமென்றும் தகவல்கள் பரவின. ஐ.பி. அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்ட வழக்கில் தாகீர் ஹூசைன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

``எங்களை எதிர்த்துத் தீர்மானம் போடப்போறீங்களா?" - வெடித்த அமித் ஷா... மிரண்ட தமிழக அமைச்சர்கள்!

அதே வேளையில், கபில் மிஸ்ராவுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கலவரத்தைத் தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல் வந்ததால், 24 மணி நேரமும் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி போலீஸ் இந்தப் பாதுகாப்பை அவருக்கு வழங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது, வடகிழக்கு டெல்லியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கபில் மிஸ்ரா பேசியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீது வழக்குப் பதிய வேண்டுமென்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகின.

கபில் மிஸ்ரா
கபில் மிஸ்ரா

வழக்கு விசாரணையின் போது, ``வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் பேசுபவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிய முடியாது. உரிய நேரம் வருகிறபோது இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவோம்''என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கபில் மிஸ்ராவுக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு