நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக மாநிலத்திலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மங்களூருவில் நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, கடந்த 17-ம் தேதி பேசிய காங்கிரஸ் கட்சியின் யு.டி.காதர், ``நாடு முழுவதும் போராட்டத் தீ பற்றியெரிந்து வருகிறது. ஆனால் கர்நாடகா, தீவுபோல இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கர்நாடகாவே பற்றியெரியும் என்று முதல்வர் எடியூரப்பாவை எச்சரிக்கிறேன்'' என்று பேசியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையான நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பிலும் அவருக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில், காதரின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த சி.டி.ரவி, ``அதுபோன்ற மனநிலைகொண்டவர்களே கோத்ராவில் ரயிலை எரித்து கரசேவர்களைக் கொன்றவர்கள். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்பதை அவர் நினைவில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன். அப்படி இல்லை என்றால், அதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் பொறுமை இழக்கும்பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை சற்று திரும்பப் பாருங்கள்'' என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு, கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

`அரசியலமைப்பு கொடுத்த பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. போலீஸார், உடனடியாக அவரை தடுப்புக் காவலில் வைக்க வேண்டும்' என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தியிருக்கிறார்.