Published:Updated:

`வாய்க்காலைத் தூர் வாரவில்லை என்றேன்; கைதுசெய்யச் சொல்லிட்டார் கலெக்டர்!' - புலம்பும் சமூக ஆர்வலர்

ஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்
ஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்

`நான் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் போய் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன். இதுல நான் எங்கே அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுக்க முடியும்?'

`விவசாய பாசனத்துக்கு உரிய வாய்க்காலைத் தூர் வாருங்கள்னு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலெக்டர்கிட்ட கோரிக்கை வச்சேன். 'கலெக்டரை எதிர்த்துப் பேசுறியா?'னு அவர் போலீஸைவிட்டு கைதுபண்ணச் சொல்லி, பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வைத்துவிட்டார். இவர் கலெக்டரா இல்லை சர்வாதிகாரியா?" என்று கொதிக்கிறார், சமூக ஆர்வலரான சண்முகம்.

ஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்
ஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்

கரூர் மாவட்டத்தின் சாமான்ய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் இருப்பவர் சண்முகம். அதோடு, கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, லாட்டரி விற்பனை, கந்துவட்டிக் கொடுமை, விவசாயப் பிரச்னைகள் என எல்லாவற்றுக்கும் முன்னின்று குரல் கொடுப்பவர்.

அந்த வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கேள்வி கேட்டதற்காகத் தன்னை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் காவல்துறையை முடுக்கிவிட்டு, கைதுசெய்ய வைத்துவிட்டதாக புலம்பிகொண்டிருக்கிறார். மூன்று நாள் காவலுக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் சண்முகத்திடம் பேசினோம்.

``நான், கரூர் மாவட்டத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு, சட்டவிரோத மதுபானக் கடைகள், சட்டவிரோத லாட்டரி சீட்டுகள் விற்பனை, சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட, பல அதிகாரிகளுக்கு அடிக்கடி மனுக்கள் அனுப்புவது வழக்கம். அந்த வகையில், கரூர் ராயனூர் பகுதியிலுள்ள ராஜ வாய்க்கால் என்ற வாய்க்கால் தூர் வாரப்படாமல் உள்ளது என்பது குறித்து, அந்த வாய்க்காலைத் தூர் வார வேண்டும் என்று ஏராளமான முறை மனு கொடுத்துள்ளேன். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வாய்க்காலைத் தூர் வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில்தான், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தியபோது கூட்டத்தில் பங்கேற்ற நான், இந்த ராஜவாய்க்கால் தூர் வாரப்படாமல் இருப்பது குறித்து கேள்வி கேட்டேன். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், 'ராஜவாய்க்கால் தூர் வாரப்பட்டுவிட்டது. ஆவணத்தைக் காட்டாவா?' என்று கேட்டார்.

சண்முகம்
சண்முகம்

ஆனால் நான், `இல்லை, இது தவறான தகவல். நான் களத்தில் இருந்துவருகிறேன். வேண்டுமானால் என்னோடு வாருங்கள், இப்போதே சென்று பார்க்கலாம். ராஜவாய்க்கால் தூர் வாரப்படாமல் இருப்பது உங்களுக்குத் தெரியவரும். எத்தனை மாதங்கள் எத்தனை முறைதான் இந்தப் பிரச்னைக்கு மனு கொடுப்பது?' என்று கேட்டேன். அதைக்கேட்டு கோபமான ஆட்சியர் அன்பழகன், `கலெக்டர் பொய் சொல்ல மாட்டேன். அந்த வாய்க்கால் தூர் வாரப்பட்டுவிட்டது. இப்படியே பேசிகொண்டிருந்தால், நான் கூட்டத்தை நடத்த மாட்டேன்' என்று சொன்னார். அதனால், நான் அமைதியாக உட்கார்ந்துட்டேன். ஆனால் ஆட்சியர் அன்பழகன், தான்தோன்றிமலை காவல்நிலைய போலீஸாரை வரவழைத்து, என்னைக் கைது பண்ண வைத்தார்.

``நான் என்ன ஹோட்டல் சர்வரா?"- கரூர் கலெக்டரின் சர்ச்சை ஆடியோ

என்னைக் கைதுசெய்து, தான்தோன்றிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, மதியம் 12 மணியிலிருந்து இரவு 6 மணி வரை காவல் நிலையத்திலேயே சாப்பாடு வாங்கிக் கொடுக்காமல் உட்கார வைத்திருந்தார்கள். பிறகு, தான்தோன்றிமலை காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர், அன்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று, அங்கே விவசாயத் துறையைச் சேர்ந்த உமாபதி என்ற அதிகாரியிடம் புகார் வாங்கிவந்து, என்மீது 5 பிரிவுகளில் வழக்குப்போட பார்த்தார்கள். கம்னியூஸ்ட் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வரவும், என்மீது 294 பி, 353 மற்றும் 506 உட்பிரிவு 1 இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இரணடு நாள் விடுமுறை என்பதால், நான் சிறையிலேயே இருக்க நேர்ந்தது. இதனால், நேற்று எனது வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்
ஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்
நா.ராஜமுருகன்

என்மீது கொலை மிரட்டல், அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் அதிகாரிகளைத் திட்டுவது என்று 3 பிரிவுகளில் வழக்கு போட்டிருக்காங்க. நான் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் போய் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன். இதுல நான் எங்கே அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுக்க முடியும்? என்மீது புகார் கொடுத்த உமாபதி, அன்று அந்தக் கூட்ட அரங்கிலேயே இல்லை. ஆட்சியாளர்கள்தான் விவசாயிகளை ஒடுக்குகிறார்கள் என்றால், இதுபோன்ற அதிகாரிகளும் எங்களது குரல்வளையை நசுக்க ஆரம்பித்திருப்பது பாசிசத்தின் வெளிப்பாடு. இதை நான் சும்மா விடப்போவதில்லை. சிசிடிவி புட்டேஜை வைத்து, என்மீது போடப்பட்டுள்ளது பொய்யான வழக்கு என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்து, மாவட்ட ஆட்சியர் அனபழகன், விவசாயத்துறை அதிகாரி உமாபதி மீது நடவடிக்கை எடுக்கவைப்பேன். அதேபோல், மனித உரிமை ஆணையத்திலும் ஆட்சியருக்கு எதிராகப் புகார் கொடுக்கப் போறேன்" என்றார் ஆவேசமாக.

இதுசம்பந்தமாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் பேச முயன்றோம். அவர் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். அவர் சார்பில் நம்மிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர்,``விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டம் முழுக்க எவ்வளவோ விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வந்து தங்கள் குறைகளைச் சொல்கிறார்கள். அவர்கள்மீது எல்லாமா வழக்கு தொடுக்கிறோம். ஒவ்வொருமுறையும் சண்முகம் இங்கே வந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிரச்னை ஏற்படுத்துவதுபோல் செயல்படுகிறார். அதிகாரிகளை ஒருமையில் பேசுகிறார்.

 அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

சரிசெய்யப்பட்ட கோரிக்கைகளை மறுபடியும் கிளப்பி, வேண்டுமென்றே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களை ரணகளமாக்கிக்கொண்டிருந்தார். அதனால், மத்த விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். அதனால்தான், உமாபதி மூலம் சண்முகத்தின் மீது வழக்கு கொடுக்கப்பட்டு, கைது நடவடிக்கை நடந்தது. ஆனால், இப்போது அவர் ஆட்சியர்மீது புழுதியை வாரித் தூற்றிக்கொண்டிருக்கிறார். அது இன்னும் அவருக்கு நெருக்கடியையே தரும்" என்றார்.

பின் செல்ல