Published:Updated:

கரூர்: `வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பம் அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதா?’ - பகீர் கிளப்பும் தி.மு.க

தி.மு.க-வினருடன் மணிராஜ்
தி.மு.க-வினருடன் மணிராஜ் ( நா.ராஜமுருகன் )

`சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு நடைபெறும் வகையில், தற்போதுள்ள கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்’ - தி.மு.க மணிராஜ்.

``ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டம், ஒழுங்கு சீர் கெடும் வகையில் செயல்படுகிறார். மாவட்டத் தேர்தல் அதிகாரி ஒருதலைபட்சமாகச் செயல்படும் நடவடிக்கைகள் குறித்து இன்று அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், இன்னும் மூன்று தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம்" என்று தி.மு.க சட்டத்துறை மாநில இணைச் செயலாளர் மணிராஜ் தெரிவித்தார்.

தி.மு.க-வினருடன் மணிராஜ்
தி.மு.க-வினருடன் மணிராஜ்
நா.ராஜமுருகன்

வாக்காளர் நீக்கல் மற்றும் சேர்ப்பில், கரூர் சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சிக்குச் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி செயல்படுவதாக, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டிவருகிறார்.

கரூர்: `கலெக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்!' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

இந்தநிலையில், கரூர் மாவட்ட தி.மு.க சட்டத்துறை சார்பில், கரூர் மாவட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வாக்குச்சாவடி பிரதிநிதி என்ற முறையில், இன்று கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில் பாலாஜி சார்பில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழியிடம் புகார் மனுவை தி.மு.க மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் வழங்கினார்.

தி.மு.கவினர்களுடன் மணிராஜ்
தி.மு.கவினர்களுடன் மணிராஜ்
நா.ராஜமுருகன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கடந்த நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்கு அனுப்பப்பட்டன. அவர் பரிசீலனை செய்து பரிந்துரைக்கும் வாக்காளர்களை மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்த்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறார்.

இப்படி, கரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஒரு மாவட்ட ஆட்சியரே ஒருதலைபட்சமாக செயல்படுவது குறித்து இன்று அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், இன்னும் மூன்று தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். இதில் மாவட்டத் தேர்தல் அதிகாரி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை இணைத்து, எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து வழக்கு தொடரவிருக்கிறோம். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு நடைபெறும் வகையில், தற்போதுள்ள கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.

கரூர் ஆட்சியர் அலுவலகம்
கரூர் ஆட்சியர் அலுவலகம்
நா.ராஜமுருகன்

அதனால், மாநிலத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, இப்படி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மாவட்டத் தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும். வாக்காளர் வரைவு பட்டியலை மீண்டும் பொதுமக்கள் பார்வைக்குவைத்து, அதில் செய்யப்பட்ட முறைகேடுகளைச் சரிசெய்ய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தி.மு.க சட்டத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு