Published:Updated:

`முறைக்கேட்டை சுட்டிக்காட்டியதற்கு வழக்கா?' - கொதிக்கும் கரூர் சமூக ஆர்வலர்!

ரேஷன் கடை முன்பு சந்திரசேகர்
ரேஷன் கடை முன்பு சந்திரசேகர்

ராயனூர் ரேஷன் கடை எண் - 2 ன் விநியோகம் செய்யும் ஊழியர் மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில், சந்திரசேகர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

`ரேஷன் கடையில் அரிசி போடலை' என்று புகார் கூறியவரை, கரூர் மாவட்ட வழங்கல் பெண் அதிகாரி ஒருவர், தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சித்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அப்படி முறைகேட்டைத் தட்டிக் கேட்ட அந்தச் சமூக ஆர்வலர் மீது, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராயனூர் ரேஷன் கடை
ராயனூர் ரேஷன் கடை

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் பிரச்னையால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி, மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

`ரேஷன் கடைல அரிசி போடல; புகார் சொல்ல போன் பண்ணேன்!’ - கரூர் பெண் அதிகாரி பேச்சால் கலங்கிய மனிதர்

ரேஷன் கடைகளில் மக்கள் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வாங்க கூட்டமாகக் குவிந்துவிடக்கூடாது என்பதற்காக, வெவ்வேறு கலர்களில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு, ஒரு நாளைக்கு ஒரு கலர் டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டும், இடைவெளிவிட்டு ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராயனூர் ரேஷன் கடை
ராயனூர் ரேஷன் கடை

இந்தச் சூழலில், கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை எண் - 2 ல் ரேஷன் பொருள்கள் வாங்கச் சென்ற, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலரை. மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, 'பொறுக்கி, போனை வைடா' என்று சந்திரசேகரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்பட்டது. இந்தநிலையில், ராயனூர் ரேஷன் கடை எண்- 2 ன் விநியோகம் செய்யும் ஊழியர் மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில், தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் சந்திரசேகர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, சந்திரசேகரிடம் பேசினோம். ``எங்களுக்கு வெள்ளை கலர் டோக்கனை வழங்கி, '2 ஆம் நம்பர் ரேஷன் கடையில் காலை 9 மணியில் இருந்து 1 மணி வரை ரேஷன் பொருள்களை வாங்கிக்கலாம்'னு சொன்னாங்க. அதை நம்பி, வெள்ளை டோக்கன் வச்சுருந்த நான் பொருள்களை வாங்க, சம்பவம் நடந்த அன்னைக்கு போனேன். இடைவெளிவிட்டு நின்னு ரேஷன் பொருள்களை வாங்கப் போனேன். ஆனால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், மக்களிடம், 'அரிசி இல்லை'ன்னே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதனால், மக்கள் எல்லோரும் புலம்பிக்கிட்டே போனாங்க. எனக்கும் அதையே சொன்னாங்க. விசாரிச்சப்ப, ஊழியர்கள் ரேஷன் அரிசியைப் பதுக்கியது தெரிய வந்துச்சு. உடனே, அங்கிருந்து வட்ட வழங்கல் அலுவலர் சுமதிக்கு போன் செய்து புகார் செய்தேன். அவர் உடனே, 'என்னன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்'னு போனை வச்சுட்டார். விடாத நான், மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகாவிடம் போன் மூலம் புகார் தெரிவித்தேன். 'இந்த இக்கட்டான நேரத்தில் மக்களை இப்படி இம்சிக்கலாமா?'னு நான் நாகரிகமாகத்தான் கேட்டேன். எனக்கு 50 வயது ஆவுது, நில புரோக்கராக இருக்கிறேன்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

ஆனா அந்தம்மா எடுத்த எடுப்பிலேயே, கோபமா பேசினாங்க. நான், 'ஏன் இப்படி பேசுறீங்க?'னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'பொறுக்கி, போனை வையடா'னு தகாத வார்த்தைகளால் பேசிட்டு, போனை வச்சுட்டார். இந்த விசயம் மீடியாவில் வெளிவர, மாநில அளவிலான நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் என்னைச் சந்தித்து, நடந்தவற்றைப் பற்றி விசாரித்தாங்க. நான் முழுவதையும் சொன்னேன். உடனே, டி.எஸ்.ஓ சுமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, மாவட்ட கலெக்டர்னு பலரையும் பார்த்துப் பேசினாங்க. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்னு என்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க. இதனால், தனக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக, ரேஷன் கடை சப்ளையர் மீனாட்சியை வைத்து என்மீது புகார் கொடுக்க வைத்து, மூன்று பிரிவுகளில் என்மீது வழக்குப் பதிவு பண்ண வச்சுட்டாங்க. இதை நான் சும்மா விடப்போவதில்லை" என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகாவிடம் பேச முயன்றோம். ``அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை" என்பதோடு அவர் முடித்துக்கொண்டார்.

ராயனூர் ரேஷன் கடை
ராயனூர் ரேஷன் கடை

தான்தோன்றிமலை காவல்நிலைய துணை ஆய்வாளர் சரவணனிடம் பேசினோம். ``தன்னைப் பணிசெய்யவிடாமல் செய்ததோடு, தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சந்திரசேகர் மீது, ரேஷன்கடை பெண் ஊழியர் மீனாட்சி புகார் கொடுத்தார். அதன்பேரில், சந்திரசேகர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு