கரூர் மாவட்ட அ.தி.மு.கச் செயலாளராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்ததோடு, அமைச்சராக இருந்த கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கரூர் மாநகரத்திலுள்ள சாலைகளில் இருபுறமும், 'கானகத்தில் கரூர்' என்ற பெயரில் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார். கரூர் மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களிலும் இப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆந்திராவிலிருந்து வாங்கிவரப்பட்ட இந்த மரக்கன்றுகளை தொடர்ந்து நீர் ஊற்றி, இந்த டிரஸ்ட் நிர்வாகிகள் வளர்த்துவருகிறார்கள். அதோடு, மரக்கன்றுகளைச் சுற்றிப் பாதுகாப்புக்காகக் கூண்டுகளை அமைத்து, அதில் `எம்.ஆர்.வி டிரஸ்ட்’ என்ற போர்டையும் பதித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், அந்த போர்டுகளையும் கூண்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த முயல்வதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். இது சம்பந்தமாக, கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் மனு அளித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅந்த மனுவில், "கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பாக, கரூர் நகரம் முழுவதும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மேற்படி டிரஸ்ட்டின் சார்பாக கடந்த மூன்று வருடங்களாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது. மேற்படி, மரக்கன்றுகளை ஆடு, மாடுகள், வாகனங்கள் சேதப்படுத்திவிடக் கூடாது என்ற காரணத்தால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் இரும்புக்கம்பியால் அமைக்கப்பட்ட கூண்டு பொருத்தப்பட்டிருக்கிறது. இதைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'சேதப்படுத்த வேண்டும்' என்ற நோக்கத்தில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என்று பொருத்தப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அகற்றினர். அதேபோல, ஒரு சில இரும்புக் கூண்டுகளையும் அகற்றினர்.

இது சம்பந்தமாக, டிரஸ்ட் சார்பாகவும் மற்றும் பொதுமக்கள் உரிய புகார் கொடுத்ததன் அடிப்படையில் மேற்படிக் கூண்டுகளும் பலகைகளும் மீண்டும் பொருத்தப்பட்டன. இந்த நிலையில், மேலே சொன்னதுபோல மீண்டும் மரக்கன்றுகளின் கூண்டுகளைச் சட்டவிரோதமாக அகற்றியிருக்கிறார்கள். இது பற்றி, மரக்கன்றுகள் அமைந்திருக்கும் இடத்துக்கு அருகில் கடைகள் வைத்திருப்பவர்களிடம் விசாரித்தபோது, கரூர் மாநகராட்சி ஊழியர்கள், கூண்டுகளை அகற்றியதாகத் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதை எங்களுடைய அ.தி.மு.க கழக நிர்வாகிகளும், எம்.ஆர்.வி டிரஸ்ட் உறுப்பினர்களும் பார்வையிட்டபோது, கரூர் 80 அடி சாலை நுழைவாயிலிலுள்ள டீக்கடைக்கு அருகிலுள்ள மரக்கன்றுக் கூண்டை மாநகராட்சி துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன், துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் அகற்ற முயன்றுகொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று அதைத் தடுத்து, 'ஏன் இப்படிச் செய்யறீங்க?' என்று கேட்டதற்கு, மேற்படி நபர்கள் தகாத கெட்ட வார்த்தைகளால் எங்கள் கழக நிர்வாகிகளைத் திட்டியதோடு, கரூர் மாநகரிலுள்ள மரக்கன்றுக் கூண்டுகள் அனைத்தையும் அகற்றப்போவதாகவும், 'உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றும் சொல்லி, அந்தச் சாலை ஓரத்தில் இருந்த பல மரக்கன்றுக் கூண்டுகளை அகற்றிவிட்டனர். மேலும், துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன்தான் ஏற்கெனவே மரக்கன்று கூண்டுகளில் பொருத்தியிருந்த பெயர்ப் பலகைகளை எடுக்கச் சொன்னார் என்று துப்புரவுப் பணியாளர் சொன்னது, எங்களது தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

தற்போது, மீண்டும் அதேபோல அராஜகமாக அனைத்துக் கூண்டுகளையும் அகற்றிவிட்டனர். இந்தச் சம்பவம் 16.06.2022 மதியம் சுமார் 4:30 மணியளவில் நடைபெற்றது. இது போன்ற செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்தவாறு உள்ளனர். இதனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் அனைத்தும் சேதமாகிவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, மேற்படி சம்பவத்துக்காக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மரக்கன்றுக் கூண்டுகளை அகற்றாமல் பாதுகாக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இது பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், ``கரூர் மாவட்டம் முழுக்க இந்த மரக்கன்றுகளை நட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு சிறப்பாகப் பராமரித்துவருகிறது. கரூர் மாநகருக்குள் எந்தச் சாலையில் நுழைந்தாலும், இரண்டு பக்கமும் இருபதடிக்கும் மேல் வளர்ந்து நிற்கும் இந்த மரக்கன்றுகள்தான் எல்லோர் பார்வைக்கும் தெரியும். இதனால், வறட்சி மிகுந்த கரூர் மாநகருக்குள் தற்போது குளிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டிரஸ்ட் சார்பாக தற்போதும் தண்ணீர் ஊற்றி ஒவ்வொரு மரமும் பாதுகாக்கப்படுகிறது.

இதனால், மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் இருக்கும் பாதுகாப்புக் கூண்டுகளில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என்று எழுதப்பட்ட போர்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குக் கிடைக்கும் பெயரை பொறுத்துகொள்ள முடியாத அமைச்சர் செந்தில் பாலாஜிதான், இப்படி மாநகராட்சி ஊழியர்களைவைத்து, மரத்தைச் சுற்றியுள்ள கூண்டுகளை அகற்றும் பணியைச் செய்யவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்" என்றார்கள்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டால்,
"இதற்கும், எங்க அண்ணனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக ஓரிரண்டு கூண்டுகளை அதிகாரிகள் அகற்றியிருக்கலாம். ஆனால், அதைவைத்து எங்கள் அண்ணன் பெயரை இதில் இழுத்துவிட்டு, சிண்டுமுடியப் பார்ப்பது தேவையில்லாதது.

சில மரக்கன்றுகளை வைத்துவிட்டு, அதில் ஆயிரம் விளம்பரம் தேடும் அவர்கள் இதையும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள்" என்றார்கள்.
'பேருந்து நிலைய அரசியல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசியல், மேம்பால அரசியல் வரிசையில் இப்போது மரக்கன்று அரசியலா?' என்று கேட்டு, கரூர் மக்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.