Published:Updated:

கொரோனா `ஹாட்ஸ்பாட்'.. கன்னியாகுமரி எல்லையை மூடிய கேரளா!

கன்னியாகுமரி- கேரள எல்லை
கன்னியாகுமரி- கேரள எல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் காவல் நிலையங்களில் இருந்தும் பாஸ் வாங்கிச் செல்பவர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது.

தமிழக - கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியை கேரள அரசு மூடியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரு மாநில காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது மருத்துவம், வங்கி ஊழியர்கள், காய்கறி, பால், உணவுப் பொருள்கள் ஆம்புலன்ஸ் சேவை மட்டுமே அனுமதித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது யாரையும் கேரள மாநிலத்துக்குள் அனுமதிக்காமல் எல்லைப் பகுதியான இஞ்சிவிளைப் பகுதியில் அம்மாநில போலீஸார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் காவல் நிலையங்களில் இருந்தும் பாஸ் வாங்கிச் செல்பவர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அதே சமயம் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.

கேரள எல்லை இஞ்சிவிளை
கேரள எல்லை இஞ்சிவிளை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கேரள மாநிலம் தனது எல்லைப்பகுதியை அடைக்கும் விதமாக மண் போட்டு தடுப்பதாகத் தகவல் பரவியது. ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பின்போது, ``தமிழர்கள் நமது சகோதரர்கள். எனவே, தமிழக எல்லையை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக எல்லைப்பகுதியான களியக்காவிளை மூடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் கூறும்போது, ``குமரி மாவட்டத்திலிருந்து மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்வதைத் தடை செய்துள்ளனர். இதனால் கேன்சர் உட்பட பல நோய்களுக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் கேரளா செல்லத் தடை விதிக்கவில்லை என்றது. அதைத் தொடர்ந்து கேரள மாநில அமைச்சர் கடந்நப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன் ஆகியோரை தொடர்புகொண்டு பேசினேன்.

தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ்
தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ்

குமரி மாவட்டத்திலிருந்து வழக்கமாக திருவனந்தபுரத்துக்கு மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். குமரி மாவட்டம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்னை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கேரள முதலமைச்சரிடம் விவாதித்து பதிலளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு