Published:Updated:

கேரளா: கன்டோன்மென்ட் பகுதியிலிருந்து வந்ததால் சிகிச்சை மறுப்பு! - சிறுவன் மரணத்தால் சர்ச்சை

நாணயம் விழுங்கியதால் இறந்த குழந்தை பிருத்விராஜ்
நாணயம் விழுங்கியதால் இறந்த குழந்தை பிருத்விராஜ்

நாணயம் விழுங்கிய குழந்தைக்கு எக்ஸ்ரே எடுக்கும்போது, `கன்டோன்மென்ட் பகுதியிலிருந்தா வருகிறீர்கள்' என சாதாரணமாகக் கேட்டோம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த நந்தினி- ராஜு தம்பதியின் 3 வயது மகன் பிருத்விராஜ். நேற்று காலை 11 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்தபோது தெரியாமல் நாணயத்தை விழுங்கியிருக்கிறான் 3 வயது குழந்தை பிருத்விராஜ். உடனடியாகப் பெற்றோர் ஆலுவா தாலுகா மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் மருத்துவர் இல்லை எனக்கூறி எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். உடனடியாக அவர்கள் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். அங்கும் குழந்தைகள் மருத்துவர் இல்லை எனக்கூறி ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள், `வாழைப்பழமும் தண்ணீரும் கொடுத்தால் நாணயம் வயிற்றுக்குள் இறங்கிச் சென்றுவிடும் என்றும், பின்னர் மலம் கழிக்கும்போது நாணயம் தானாக வெளியேறிவிடும்’ என்றும் கூறியுள்ளனர். அத்துடன் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு செல்லும்படியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தை பிருத்விராஜ்
குழந்தை பிருத்விராஜ்

இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட கன்டோன்மென்ட் பகுதியிலிருந்து சென்றதால் குழந்தையை சிகிச்சைக்கு அட்மிட் செய்ய ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மறுத்துவிட்டதாகக் குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது குழந்தை சாதாரணமாகத்தான் இருந்தது. பழமும் சோறும் கொடுத்தால் சரியாகிவிடும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும். நாணயம் விழுங்கியதை மருத்துவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் குழந்தையின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்

இதுகுறித்து ஆலுவா தாலுகா மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும்போது,``குழந்தைகள் அறுவைசிகிச்சை மருத்துவர் இல்லாததால் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். எக்ஸ்ரே எடுக்கும்போது கன்டோன்மென்ட் பகுதியிலிருந்தா வருகிறீர்கள் என சாதாரணமாக கேட்டோம்" என்றார். குழந்தையின் சிறு குடலில் நாணயம் சிக்கியிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க கேஸ்ட்ரோ சர்ஜன் இல்லாததால் ஆலப்புழா மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாக எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இந்தநிலையில் நாணயம் விழுங்கிய 3 வயது குழந்தை மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கே.கே.சைலஜா வெளியிடுள்ள அறிக்கையில், "3 வயது குழந்தை மரணம் அடைந்த சம்பவம் துர்பாக்கியமானது. குழந்தையின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை முடித்து வேகமாக ரிப்போர்ட் அனுப்பும்படி சுகாதரத்துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு