Published:Updated:

`குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது!'- ஆளும்கட்சி பிரமுகரைத் தெறிக்கவிட்ட கேரள எஸ்.ஐ!

மலையரசு

இந்த போலீஸ் சீருடையை நான் அணிந்ததற்கு அதுவே காரணம். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். என் சீருடை மரியாதையைக் காப்பாற்ற நான் சாகவும் தயாராக உள்ளேன்.

SI Amruth Rangan
SI Amruth Rangan ( facebook )

கேரள மாநிலம் கலமச்சேரி பகுதியில் அமைந்துள்ளது கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். இங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பான SFI தங்களுக்குள் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கல்லூரிக்குள் திங்கள்கிழமை பேரணி சென்றுள்ளனர். அதேநேரத்தில் அங்கு பி.டெக் மாணவர்கள் சிலர் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

cochin university of science and technology
cochin university of science and technology
facebook

அப்போது இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் சில மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. தகவலறிந்துவந்த போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர் அம்ருத் ரங்கன் தலைமையில் கலவரத்தைக் கட்டுப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு கல்லூரியில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளது. அதன்படி தாக்குதலுக்கு உள்ளான SFI லீடரையும் தனது போலீஸ் வாகனத்தில் முதலுதவிக்கு அனுப்பியுள்ளார் எஸ்.ஐ. அம்ருத். பின்னர் விசாரணைக்குப் பிறகு சிலரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

நடவடிக்கையை அடுத்து உள்ளூர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான ஜாகீர் ஹுசேன் என்பவர் எஸ்.ஐ. அம்ருத்துக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துள்ளார். இந்த ஆடியோ வெளியாக எஸ்.ஐ அம்ருத் கேரளாவில் ஒரேநாளில் வைரலாகியுள்ளார். அந்த ஆடியோவில், ``நீ ஏன் SFI லீடரைக் கைது செய்தாய். உயர் அதிகாரிகளே எங்களிடம் கண்ணியமாகப் பேசுகிறார்கள். உனக்கு என்ன தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா?. முதலில் நீ ஏன் SFI தலைவரை ஒரு போலீஸ் வேனில் முதலுதவி மையத்துக்கு அழைத்துச் சென்றாய். அவர் ஒரு மாணவத் தலைவர் என்று தெரிந்தும் துஷ்பிரயோகம் செய்துள்ளாய். மாணவத் தலைவர் என்று அந்தப் பையன் கூறிய பின்பும் நீ அவரிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை.

Zakir Hussain CPM
Zakir Hussain CPM
facebook

இங்கு டிரான்ஸ்பர் ஆகிவந்த பிறகு நான் உன்னுடன் முதல்முறையாகப் பேசினாலும், என்னுடைய அரசியல் சகாக்களிடமிருந்து உன்னைக் குறித்து நிறைய புகார்களைக் கேட்டேன். கலமச்சேரியின் அரசியலையும், இங்கே என்னென்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதையும் புரிந்து, அதன்படி நடந்து கொள்வதை நீ நினைவில் கொள்வது நல்லது" இப்படி உள்ளூர் அரசியல் பிரமுகரான ஜாகீர் ஹுசேன் கோபமாகப் பேச பொறுமையிழந்த எஸ்.ஐ. அம்ருத், ``எஸ்.ஐ.பதவியில் அமர நான் எந்த சபதமும் எடுக்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சிக்கும் அனுதாபி கிடையாது. எந்த அரசியல் கட்சியைப் பற்றியும் கவலையும் இல்லை.

நான் இருக்கும்போது எந்த மாணவரும் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்" எனக் கூற இடைமறித்த ஜாகீர், ``நீங்கள் இங்கு முதல் எஸ்.ஐ. கிடையாது. ஞாபகம் வைத்துக்கொள்'' என மீண்டும் கோபமாகப் பேசினார். அதற்கு, ``ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம் இருக்கிறது சகாவே. சினிமாவில் வரும் போலீஸைப் போல, யாருக்கும் மரியாதை செலுத்த, நான் இந்த போலீஸ் வேலைக்கு வரவில்லை. நான் வந்ததே என் கடமையைச் செய்யத்தான். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே நான் போலீஸ் சீருடை அணிந்துள்ளேன். அரசியல்வாதிகளுக்குக் குனிந்து குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது.

SI Amruth Rangan
SI Amruth Rangan
facebook

நான் இறக்க நேரிட்டாலும், மாணவர்களை அடித்து உதைக்க நான் அனுமதிக்க மாட்டேன். இந்த போலீஸ் சீருடையை நான் அணிந்ததற்கு அதுவே காரணம். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். என் சீருடை மரியாதையைக் காப்பாற்ற நான் சாகவும் தயாராக உள்ளேன்" என எஸ்.ஐ உக்கிரமாக பதில் கொடுத்தார். முன்னதாக நான் போகும் போதே மோதல் அதிகமாக இருந்தது. மேலும், மோதல்களைத் தவிர்ப்பதற்காக மாணவர்களை அழைத்துச் சென்றேன். அதனால் SFI உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று அம்ருத் கூறுகிறார்.

ஆனால் அவர் சொல்வதைக் கேட்காமல் தொடர்ந்து ஜாகீர் பேச திருப்பி பதிலடி கொடுக்கிறார் எஸ்.ஐ. இந்த ஆடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாக விஷயம் பூதாகரமானது. பலரும் எஸ்.ஐ.க்கு ஆதரவாக கமென்டுகள் தெரிவித்துவருகின்றனர். அதேவேளையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்ல, அந்த அரசியல் பிரமுகரை வெகுவாக கண்டித்த நீதிபதிகள், ``அரசியல்வாதி எவ்வாறு போலீஸைக் கேள்வி கேட்கலாம். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்'' எனக் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

SI Amruth Rangan
SI Amruth Rangan
facebook

இதற்கிடையே, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ``எஸ்.ஐ. வேண்டுமென்றே இந்த ஆடியோவைப் பரவவிட்டுள்ளார்'' எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் மீதான சில குற்றச் செய்திகளை சிலர் வேண்டுமென்றே நெட்டில் உலாவவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் கேரள போலீஸுக்கும், ஆளும் கட்சிக்கும் மோதல் தொடங்கியுள்ளது. எனினும் பொதுமக்கள் அரசியல்வாதி என்றுகூட பார்க்காமல் தைரியமாகப் பேசிய எஸ்.ஐ. அம்ருத்தின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டி அவரை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.