Published:Updated:

போராட்டம் நடத்திய பட்டியலின பெண் எம்.எல்.ஏ உட்கார்ந்த இடத்தை சாணத்தை ஊற்றி கழுவிய காங்கிரஸார்!

மலையரசு

போராட்டம் நடத்திய பட்டியலின பெண் எம்.எல்.ஏ அமர்ந்திருந்த இடத்தை சாணத்தை ஊற்றி கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள்.

காங்கிரஸ் தொண்டர்கள்
காங்கிரஸ் தொண்டர்கள் ( ANI )

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்காரா தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கீதா கோபி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், தொடர்ந்து இரண்டு முறை இதே தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தனது தொகுதிக்கு உட்பட்ட த்ரிப்ரையார் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன் அமர்ந்து நீண்ட நேரம் போராட்டம் நடத்தினார் எம்.எல்.ஏ கீதா.

எம்.எல்.ஏ கீதா
எம்.எல்.ஏ கீதா
facebook

பின்னர் சாலை சரி செய்யப்படும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிய பிறகே போராட்டத்தை வாபஸ் வாங்கினார். இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் அந்தச் சம்பவம் நடந்தது. போராட்டத்தை முடித்துக்கொண்டு எம்.எல்.ஏ கிளம்ப அங்கிருந்த அந்தப் பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், போராட்டம் நடத்திய இடத்துக்குச் சென்று கீதா அமர்ந்திருந்த இடத்தில் தாங்கள் கொண்டுவந்திருத்த மாட்டுச் சாணத்தை ஊற்றி சுத்தம் செய்தனர்.

எம்.எல்.ஏ கீதா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் உட்கார்ந்த பகுதியை சுத்தம் செய்வதாகக் கூறி காங்கிரஸ் தொண்டர்கள் அப்படிச் செய்தனர். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாக, கடும் கண்டனம் எழுந்துள்ளது. எம்.எல்.ஏ-வை சாதிய ரீதியாகச் சித்திரித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

சாணத்தை ஊற்றி கழுவும்  காங்கிரஸ் தொண்டர்கள்
சாணத்தை ஊற்றி கழுவும் காங்கிரஸ் தொண்டர்கள்
ANI

எம்.எல்.ஏ கீதாவும் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் கொடுத்துள்ளார். மேலும், ``ஜனநாயக ரீதியாக காங்கிரஸ் பிரமுகர்கள் போராட்டம் நடத்த வழிகள் உண்டு. ஆனால், நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னை இப்படி இழிவுபடுத்தியுள்ளார்கள்" எனக் கூறியுள்ளார் கீதா. இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.