Published:Updated:

`அவர்களை அடையாளப்படுத்துவதுதான் நோக்கம்!’ -`கர்த்தாவின்டே நாமத்தில்’ சீக்ரெட் பகிரும் லூசி

மடங்களுக்குள் புதைந்துகிடக்கும் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்கிறார் கன்னியாஸ்திரி லூசி களப்புரா.

கன்னியாஸ்திரி லூசி களப்புராவின் புத்தகம்
கன்னியாஸ்திரி லூசி களப்புராவின் புத்தகம்

சீரோ மலபார் சபையைச் சேர்ந்த ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல் கேரளத்தில் ஒரு மடத்தில் கன்னியாஸ்திரியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் பிஷப்பை பாதுகாக்க சபை முயற்சி செய்வதாக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பிஷப் மீதான வழக்கு இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் சபை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக கன்னியாஸ்திரி லூசி களப்புரா சபையிலிருந்து நீக்கப்பட்டார்.

பிஷப் பிராங்கோ முளய்க்கல்
பிஷப் பிராங்கோ முளய்க்கல்

ஆனால், மடத்தைவிட்டு வெளியேறமாட்டேன் எனக் கூறியதுடன் மீடியாக்களிடம் பேசினார் லூசி களப்புரா. இந்தநிலையில் கன்னியாஸ்திரி லூசியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் குறித்து `கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற புத்தகம் தயாரானது. அந்தப் புத்தகத்தை வெளியிடக்கூடாது என சபை சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. புத்தகத்தை வெளியிடத் தடை கேட்டு சிலர் கோர்ட்டுக்குச் சென்றனர். ஆனால், தடை விதிக்க கோர்ட் மறுத்துவிட்டது. இந்தநிலையில், எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் நேற்று `கர்த்தாவின்டே நாமத்தில்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பெஞ்சமின், சினிமா இயக்குநர் விது வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் பெஞ்சமின் பேசுகையில், ``கத்தோலிக்க சபை ஒரு கன்னியாஸ்திரியையும் அவர் எழுதிய புத்தகத்தையும் கண்டு எதற்காகப் பயப்படுகிறது. இதன்மூலம் தவறான ஆட்கள் சிலர் சபையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தவறு நடந்தது என்று அவர்களுக்கும் தெரியும் என்பதால் சபையைச் சேர்ந்தவர்கள் எழுத்தாளருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்" என்றார்.

எழுத்தாளர் பெஞ்சமின் மற்றும் கன்னியாஸ்திரி லூசி களப்புரா
எழுத்தாளர் பெஞ்சமின் மற்றும் கன்னியாஸ்திரி லூசி களப்புரா

இதையடுத்துப் பேசிய கன்னியாஸ்திரி லூசி களப்புரா, ``யாரையும் அவமானப்படுத்துவது `கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற புத்தகத்தின் நோக்கம் அல்ல. மடங்களுக்குள் புதைந்துகிடக்கும் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். பெண்கள் இந்த நாட்டின் செல்வம். வனிதா மதில் (பெண்கள் சுவர்) போன்ற பெண்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் பெண்கள் மீதான அரசின் கடமை முடிந்துவிடாது" என்றார்.

`நான்குமுறை பாலியல் தொல்லை கொடுத்தார்!' -கேரளாவை அதிரவைத்த `கர்த்தாவின்டே நாமத்தில்'

கண்ணூர் டி.சி.புக் ஸ்டாலில் `கர்த்தாவின்டே நாமத்தில்’ புத்தகம் விற்பனை மேளா நேற்று நடத்தப்பட்டது. சிலர் இந்தப் புத்தக மேளாவை நடத்தவிடாமல் ஸ்டாலை மூடுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். போலீஸ் பாதுகாப்புடன் புத்தக விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.