Published:Updated:

`பொங்கல் விழா கொண்டாடியது குற்றமா?’ - மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கிய கிரண்பேடி

தன் கருத்துகள் மற்றும் செயல்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தற்போது பொங்கல் கொண்டாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கிரண்பேடி
கிரண்பேடி

ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒரே புள்ளியில் நின்று குரலெழுப்பிய தருணம் அது. சென்னையில் இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரண்பேடி, ``ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய திருவிழாவாக இருந்தாலும், காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. அதனால்தான் ஜல்லிக்கட்டுக்குச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால் ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையில்லை” என்று கூறினார்.

அப்போது அதே மேடையில் அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய ஆர்.ஜே பாலாஜி, ``நீங்கள் காலில் அணிந்திருக்கும் தோல் செருப்பு எதிலிருந்து வந்தது? மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்றுமதி செய்கிறார்களே அது சித்ரவதை இல்லையா? அந்த நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள்” என்று கூறினார்.

கிரண்பேடி
கிரண்பேடி

கிரண்பேடியின் அந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் அவருக்கெதிரான போராட்டங்கள் முன்னெடுத்தனர் இளைஞர்கள். ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் தனது அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் போட்டோ, வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர் கிரண்பேடி.

பழங்குடியினர்களைக் குற்றப்பரம்பரையினர் என்ற பொருள்படும்படி கூறியது, கர்நாடகாவில் பாபர் மசூதி இடிப்பை மாணவர்கள் கொண்டாடுவது போன்ற நிகழ்ச்சி, போலி வீடியோவை வெளியிட்டு `நாசா’ வெளியிட்ட வீடியோவில் சூரியன் `ஓம்’ என்று உச்சரிப்பதாகக் கூறியது என அவர் சிக்கிய சர்ச்சைகள் அனைத்துக்கும் காரணம் அவர் வெளியிடும் ட்விட்டர் பதிவுகள்தான்.

`ஒரு கவர்னர் இப்படிச் செய்யலாமா?' -  கிரண்பேடிக்கு எதிராக களமிறங்கிய அமைப்புகள்

அந்த வரிசையில்தான் தற்போது பொங்கல் விழாவைக் கொண்டாடி நெட்டிசன்களிடம் சிக்கியிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினார் கிரண்பேடி. அப்போது 2 மாடுகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்றின் மீது கிரண்பேடி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் வலம் வந்தனர். இந்தப் புகைப்படத்தை `குடும்ப விழா’ என்று தலைப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்தார் கிரண்பேடி.

கிரண்பேடி
கிரண்பேடி

அவ்வளவுதான், அதற்கு வந்த கமென்ட்டுகள் அனைத்தும் வேற ரகம். ``கிரண்பேடி அவர்களே ஜல்லிக்கட்டு விழாவை மாடு வதை என்று கூறிவிட்டு நோஞ்சான் மாட்டின் மீது இத்தனை பேர் அமர்கிறீர்களே... இதெல்லாம் மாடு வதை இல்லையா”, ``மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால்...” ``ஓவர் லோடுக்கு வழக்கு கிடையாதா”, ``அந்த மாடு அழுவது உங்கள் காதுகளில் கேட்கவில்லையா... இது உங்களுக்கே நியாயமா” என்ற ரீதியில் விமர்சனங்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

``பொங்கல் விழா கொண்டாடியது குற்றமா?” என்று ஆளுநர் மாளிகைக்குள் அப்செட்டில் இருக்கிறாராம் கிரண்பேடி.