தூதரக பார்சல் என்ற பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் தங்கம் கடத்த முயன்ற வழக்கில் தினமும் புதுப்புது திருப்பங்கள் நிகழ்கின்றன. தங்கம் கடத்தல் வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான ஸரித், ஸ்வப்னா ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.
முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்தவர் சிவசங்கரன் என்பதால் அரசியல்ரீதியாக காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் கே.கருணாகரன், கேரள முதல்வராக இருந்தபோது இஸ்ரோ நம்பிநாராயணன் வழக்கு விஸ்வரூபம் எடுத்தது.
அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை மேற்கோள் காட்டியும், தங்கம் கடத்தல் வழக்கு குறித்து கருத்து தெரிவித்த பி.ஜே.பி தலைவர் ஜே.பி நட்டா 'கேரளத்தில் தங்கத்தின் நிறம் சிவப்பு' எனக் கிண்டலடித்தார். இதற்கு பதில் கொடுக்கும்விதமாக சி.பி.எம் கேரள மாநில பொதுச்செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கட்சிப் பத்திரிகையான தேசாபிமானியில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் கோடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், "முன்பு பொய் வழக்குப்போட்டு ஒரு முதலமைச்சரை ராஜினாமா செய்யவைத்த அனுபவம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தது. அதற்காக ஒரு பெண்ணையும் ஐ.பி.எஸ் அதிகாரியையும் மையமாக வைத்து கதைகள் உருவாக்கினார்கள். அதனால் கே.கருணாகரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல ஒரு நிலை இப்போது உருவாகும் எனக் காங்கிரஸ் நினைக்க வேண்டாம். பொய்க் கதைகளை சொல்லி, போராட்டம் நடத்தும் காங்கிரஸின் எண்ணம் நிறைவேறாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொரோனாவுக்கு எதிராக திறம்பட நடவடிக்கை எடுக்கும் பினராயி விஜயனுக்கு எதிராகப் பொய் கதைகளை சொல்லி, அராஜகமாக போராட்டம் நடத்தி அரசை தகர்க்க நினைத்தால் அது நடக்காது. பினராயி விஜயனுக்கு பக்கபலமாகக் கட்சி ஒற்றுமையாக உள்ளது. இனியும் ஒரு பொய் வழக்கை கேரளா அனுமதிக்காது. மத்திய அரசு விசாரணை ஏஜென்சிகளை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தும் எனத் தெரியும். இருந்தாலும் இந்த வழக்கில் மத்திய அரசு ஏஜென்சிகளின் விசாரணையை பினராயி விஜயன் வரவேற்றிருக்கிறார். இதன் மூலம் அரசுக்கும் கட்சிக்கும் பயம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்.
இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள சிவசங்கரன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர். அனுபவம்மிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதால் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் மீது குற்றச்சாட்டு வந்ததும் அவரை பாதுகாக்காமல் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார் பினராயி விஜயன். அதிகாரியாக இருந்தாலும் சரி மற்றவராக இருந்தாலும் சரி, அவர்களே தோண்டிய குழியில் அவர்களே விழுந்தால் கரையேற்ற அரசின் கைகள் நீளாது.

இப்போது வரும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் தங்கத்தின் நிறம் காவியும், பச்சையும் எனப் புரிகிறது. காவி பி.ஜே.பி-யையும் பச்சை சில தீவிரவாத அமைப்புகளையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளையும் குறிக்கும். தங்கம் கடத்தல் விவகாரத்தில் எதாவது சமுதாயத்தை குறித்தோ, மாவட்டத்தை பற்றியோ, குறிப்பிட்ட இடத்தை பற்றியோ அவதூறு பரப்பக்கூடாது. இத்தகைய பிரசாரங்களை கம்யூனிஸ்ட் கடுமையாக எதிர்க்கும்" என்றார்.