Published:Updated:

`கொள்ளிடம் கரையில் கான்கிரீட் மிக்ஸிங் ஆலை; ஆற்றிலிருந்து மணல்!’- மயிலாடுதுறை சர்ச்சை

கான்கிரீட் மிக்ஸிங் ஆலை
கான்கிரீட் மிக்ஸிங் ஆலை

கொள்ளிடம் ஆற்றில், தனியார் கட்டுமான நிறுவனம், கான்கிரீட் மிக்ஸிங் ஆலையை அமைத்து, கடந்த 3 மாதகாலமாக இரவு பகலாக மணலை எடுத்துவருவது அதிர்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

மயிலாடுதுறை அருகே, கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதியின்றி இயங்கிவரும தனியார் காங்கிரீட் மிக்ஸிங் ஆலை, கடந்த 3 மாத காலமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் ஈட்டுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. அந்த நிறுவனம்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

தஞ்சை, நாகை, மாவட்டங்களில் ஆறுகளில் அடிதளம் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை ரூ.54 கோடிக்கு ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ஃபரா என்கிற தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த 3 மாத காலமாகச் செய்து வருகிறது. இந்த நிறுவனம், மயிலாடுதுறை அருகே குமாரமங்கலம் கிராமத்தின் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில், காங்கிரீட் மிக்ஸிங் ஆலையை அமைத்துள்ளது. மின் இணைப்பு வாங்கி, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலை ஆற்றிலிருந்தே பொக்லைன் இயந்திரம் மூலம் எடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த மணலைப் பயன்படுத்தி கான்கிரீட் கலவை தயார் செய்து, அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் அனுப்பி வைப்பதோடு, தனியாருக்கும் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

தி.மு.க-வுக்கு மணல் குவாரிகள்? - சி.வி.சண்முகத்தை சீண்டும் சிவகங்கை போஸ்டர்

இதுபற்றி குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நம்மிடம், ``மணல் தட்டுப்பாடு காரணமாக சாமான்யர்களின் வீடு மற்றும் தனியார் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் யாவும் தடைபட்டுக் கிடக்கிறது. தனியார் யாரேனும் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் சாக்குமூடையில் மணல் கடத்தியவர்கள் எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தினந்தோறும் மினிலாரி, டிராக்டர், லாரி, மாட்டுவண்டி என மணல் திருட்டில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கொள்ளிடம் ஆற்றில், தனியார் கட்டுமான நிறுவனம் கான்கிரிட் மிக்ஸிங் ஆலையை அமைத்து, கடந்த 3 மாத காலமாக இரவு, பகலாக மணலை எடுத்துவருவது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அன்னை இன்ஃபரா தனியார் கட்டுமான நிறுவனத்தின் கான்கிரீட் மிக்ஸிங் ஆலையைக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும், அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். கடந்த 3 மாதகாலமாக அள்ளிய மணலுக்குரிய தொகையை வசூல் செய்ய வேண்டும். அந்த நிறுவனம்மீது வழக்கு பதிவுசெய்து, நிறுவனப் பொறுப்பாளர்களைக் கைதுசெய்ய வேண்டும்" என்றனர்.

இப்புகார் குறித்து மயிலாடுதுறை தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``எங்களிடம் அனுமதி பெறவில்லை. பொதுப்பணித்துறையில் பெற்றதாகச் சொல்கிறார்கள். அது, எந்த அளவுக்கு உண்மை என்பதை அறிய அப்பகுதி வி.ஏ.ஓ மற்றும் வருவாய் ஆய்வாளரை விசாரணை மேற்கொள்ளச் சொல்லியுள்ளேன்" என்றார்.

மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் பிரியாவிடம் கேட்டபோது, ``எங்களிடம் அனுமதி கேட்டார்கள், கொடுக்கலை. அதன்பின் கலெக்டரிடம் கேட்டார்கள். அவரும் மறுத்துவிட்டார். தற்போது எப்படி இயங்கிவருகிறார்கள் என்பதை விசாரிக்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு