Published:Updated:

சரியான நேரத்துக்கு 108 ஆம்புலன்ஸை அனுப்பாததால் முதியவர் இறந்தாரா? - சார் ஆட்சியரை சுற்றும் சர்ச்சை!

காலத்தோடு செல்ல முடியாததால், மணியன் இறந்துவிட்டார். 'காலத்தோடு 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால், மணியனைக் காப்பாற்றியிருக்கலாம்'னு அவரின் உறவினர்கள் கதறினார்கள்.

108 ஊழியர்கள் அறை
108 ஊழியர்கள் அறை

`குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை அப்புறப்படுத்த சார் ஆட்சியரின் பி.ஏ முயன்றார்.

108 ஊழியர்கள் அறை
108 ஊழியர்கள் அறை

அப்போது, ஹார்ட் அட்டாக் வந்து துடித்த ஓய்வுபெற்ற ஆசிரியரை சரியான நேரத்துக்குச் சென்று காப்பாற்ற முடியவில்லை' என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் புகார் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vikatan

கரூர் மாவட்டம், குளித்தலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அப்போது, குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இந்த அறையின் அருகிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்கள் இரண்டுக்கும், ஆதார் மையம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

 குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம்
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம்

இந்நிலையில், சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அலுவலகத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறையைக் காலி செய்ய சொல்லி உத்தரவு வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, மாவட்ட இணை இயக்குநர், குளித்தலை தலைமை மருத்துவர் ஆகியோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரம் கால அவகாசமும் தரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நம்மிடம் பேசிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ``சம்பவத்தன்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷூம் டெக்னீஷியன் ரம்யாவும் இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு பெரியார் நகரிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் மணியன் இதய வலியால் துடிப்பதாகக் கூறி 108 ஆம்புலன்ஸ் சேவையைக் கேட்டு போன் வந்திருக்கிறது. அதற்கு, அவர்கள் கிளம்பத் தயாரானார்கள். ஆனால், அப்போது அங்கே வந்த சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், `உடனே அறையைக் காலி செய்துகொடுங்கள்'னு வாக்குவாதம் பண்ணினார். இதனால், 20 நிமிடம் காலவிரயம் ஆகிவிட்டது.

108 ஊழியர்கள் அறை
108 ஊழியர்கள் அறை

ஆனால், காலத்தோடு செல்ல முடியாததால், மணியன் இறந்துவிட்டார். `காலத்தோடு 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால், மணியனைக் காப்பாற்றி இருக்கலாம்'னு அவரோட உறவினர்கள் கதறுனாங்க. எங்களுக்குனு ஒதுக்கப்பட்ட அறையை சார் ஆட்சியர் மிரட்டி காலி பண்ண வைக்கப் பார்க்கிறார். அவரோட பிடிவாதத்தால், அநியாயமா ஒரு உயிர் பிரிஞ்சுட்டு" என்றார்கள்.

Vikatan

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் பேசினோம். ``அது வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடம். வாய்மொழி உத்தரவோடுதான் அங்கே 108 ஊழியர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்குக் கூடுதல் இடம் தேவைப்பட்டதால், அந்த அறையைக் காலி பண்ணிக்க சொன்னோம். ஒருமாதத்துக்கு முன்பே அவர்களுக்குத் தகவல் கொடுத்துட்டோம். மாவட்ட இணை இயக்குநர், குளித்தலை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்னு பலருக்கும் தகவல் சொல்லிட்டோம். அவர்களும், 'குளித்தலை ஜி.ஹெச்சிலேயே நிறுத்திக்கலாம்'னு சொல்லிட்டாங்க. என்னோட உதவியாளர் போய், ஒருவாரத்துக்கு முன்னாடி, 'ஒருவாரத்துல காலி பண்ணிக்குங்க'னு சொல்லிட்டார். ஒருவாரம் கடந்ததும்தான், என் உதவியாளர் முருகன் போய், அவர்களை அறையைக் காலி பண்ண சொல்லியிருக்கிறார். அவர் போன நேரத்துல அங்கே 108 ஆம்புலன்ஸ் அங்கே இல்லை. அதேபோல், முருகனும் 5 நிமிஷம்தான் அங்கே இருந்திருக்கிறார். 20 நிமிடமெல்லாம் அங்கே இருந்து வாக்குவாதம் பண்ணவில்லை. அந்த நேரத்தில் போன் எதுவும் அவர்களுக்கு வந்ததாகவும் தெரியவில்லை.

ஷேக் அப்துல் ரஹ்மான்
ஷேக் அப்துல் ரஹ்மான்

அந்த நேரத்தில், மணியன் இறந்ததை, இந்த விவகாரத்தோடு முடிச்சுப்போட்டு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரச்னை ஆக்கிட்டாங்க. மற்றபடி, மணியன் உறவினர் ஒருவர் என்கிட்ட, 'அவர் வலியால துடிச்சதும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் பண்ணினோம். ஆம்புலன்ஸ் இல்லைன்னதும், தனியார் ஆம்புலன்ஸை அழைத்து, அதுல மணியனை ஏத்திக்கிட்டு போய் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனா, அவரை காப்பாற்ற முடியவில்லை'னு சொன்னார். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், `இங்க எங்களை காலி பண்ண சொன்னா, அய்யர்மலைக்குதான் போகணும். அங்க போனா, நோயாளிகளை லேட்டாதான் வந்து ஏத்திக்கிட்டு போக முடியும்'னு தவறான தகவலை பரப்பிவிட்டுட்டாங்க. உடனே, 'வட்டாட்சியர் அலுவலகத்தைவிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை மாற்றக்கூடாது'னு சிலர் மனுக்கொடுத்திருக்காங்க" என்று தங்கள் தரப்பு நியாயத்தைச் சொன்னார்.