Published:Updated:

கூடலூர் அதிர்ச்சி: ஆபாசமாகப் பேசிய எஸ்.ஐ; தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவர்

லாரி டிரைவர் தியாகராஜன்
லாரி டிரைவர் தியாகராஜன்

`கூடலூர் போலீஸ் எஸ்.ஐ ஆபாச வார்த்தைகளால் மிக மோசமாக திட்டியதாலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார்' என ஓட்டுநர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நர்த்தகி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை சுற்றி வளைத்து, அதன் ஓட்டுநரிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளனர் கூடலூர் காவல்துறையினர். 'லாரிக்குள் இருக்கிறது... எடுத்து வருகிறேன்' என லாரிக்குள் ஏறிய அந்த ஓட்டுநர், பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீப் பற்றவைத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீக்காயங்களுடன்
தியாகராஜன்
தீக்காயங்களுடன் தியாகராஜன்

கூடலூர் நந்தட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், நடந்த சம்பவம் குறித்துப் பேசுகையில், "கூடலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். பல ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக உள்ளார். கூடலூரில் இருந்து லாரியை ஓட்டிச்செல்லும் வழியில் ஆட்டோ ஒன்றின் மீது மோதி லேசான விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்தனர்.

தாசில்தார் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம்... ஏன் தெரியுமா?

அதில் ஒரு காவலர் லாரி ஓட்டுநர் தியாகராஜனை மிகவும் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த தியாகராஜன் லாரிக்குள் பாட்டிலில் வைத்திருந்த கெரசினை ஊற்றிப் பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றார். 50 சதவிகித காயங்களுடன் தற்போது கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்றார்.

தீக்காயங்களுடன்
தியாகராஜன்
தீக்காயங்களுடன் தியாகராஜன்

இதுகுறித்து கூடலூர் காவல்துறையினரிடம் கேட்டோம். "அந்த லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்தார். கூடலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவரிடம் லாரியின் ஆவணங்களைக் கேட்டார். உள்ளே எடுக்கச் சென்றவர், இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டார். வேறு எந்தக் காரணமும் இல்லை" என்கின்றனர்.

லாரி ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு