Published:Updated:

`இப்போது முட்டை சாப்பிட்டால் பிற்காலத்தில் நர மாமிசம் சாப்பிடுவார்கள்'- பாஜக எம்பி சர்ச்சை கருத்து!

குழந்தைகள் முட்டை சாப்பிடுவது, நர மாமிசம் சாப்பிடுபவர்களாக பிற்காலத்தில் அவர்களை மாற்றும் என்று மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோபால் பார்க்கவா
கோபால் பார்க்கவா

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டைகளை வழங்குவதற்கு அம்மாநில ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரான கோபால் பார்க்கவா குழந்தைகள் முட்டை மற்றும் மாமிசம் சாப்பிடுவது பிற்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக அவர்களை மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள அரசாங்கத்திடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? குழந்தைகளை முட்டைகளையும், இறைச்சியையும் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்துகிறீர்கள். இந்திய கலாசாரம் எப்போதும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை அனுமதித்தது கிடையாது. குழந்தைகளாக இருக்கும் போதே அவர்கள் முட்டைகளையும் இறைச்சிகளையும் சாப்பிட்டால் பிற்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் இம்ரடி தேவி அங்கன்வாடி குழந்தைகளுக்கான மதிய உணவில் முட்டைகளைச் சேர்க்க முடிவு செய்துள்ளதை எதிர்த்து அவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2015 ஆம் ஆண்டு இதே திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதை அப்போதைய சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பிஜேபி அரசு ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.