Published:Updated:

கொரோனாவால் முடங்கிய சுகாதாரத்துறை செயலர்... ஒரு மாதம் கழித்து கிடைத்த அமைச்சர்... கதி கலங்கிய ம.பி!

கொரோனா பரவி ஒரு மாதம் கழித்து பதவியேற்ற அமைச்சர்
கொரோனா பரவி ஒரு மாதம் கழித்து பதவியேற்ற அமைச்சர்

இந்தூர், போபால் நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறின. கொரோனா குறித்து பரிசோதிக்கச் சென்ற சுகாதாரப்பணியாளர்கள்மீது கற்களை வீசி தாக்கிய சம்பவமும் இந்தூரில்தான் நடந்தது.

கொரோனா இந்தியாவை தாக்கத் தொடங்கிய காலகட்டத்தில்தான், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துவிட்டு, பாரதிய ஜனதாவின் ஷிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். அந்தச் சமயத்தில், வேறு எந்த அமைச்சரும் அவருடன் பதவியேற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியது. ஆனாலும், மத்தியப்பிரதேசத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பேற்கவில்லை. நாட்டையே கொரோனா அச்சுறுத்திக்கொண்டிருக்கையில், மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொடர்பான பணிகளை முடுக்கிவிட முதலமைச்சர் மட்டுமே தனிஒருவனாகக் களத்தில் இருந்தார். இதற்கிடையே, மத்தியப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பல்லவி ஜெயினையும் கொரோனா பாதித்தது.

தனிமைப்படுத்தப்பட்ட பல்லவி ஜெயின்
தனிமைப்படுத்தப்பட்ட பல்லவி ஜெயின்

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பல்லவியின் மகனிடத்திலிருந்து அவருக்கும் கொரோனா தொற்றியது. இதனால், பல்லவி ஜெயினும் தனிமைப்படுத்தப்பட்டார். பேரிடரை ஏற்படுத்தும் ஒரு நோய் மாநிலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சரும் இல்லை, செயலரும் இல்லையென்றால் நிலைமை என்னாவது? இந்தூர், போபால் நகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறின. கொரோனா குறித்து பரிசோதிக்கச் சென்ற சுகாதாரப்பணியாளர்கள்மீது கற்களை வீசி தாக்கிய சம்பவமும் இந்தூரில் நடந்தது. அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, 23 ஏப்ரல் 7 மணி நிலவரப்படி மத்தியப்பிரதேசத்தில் 1,687 பேரை கொரோனா தாக்கியுள்ளது. 83 பேர் பலியாகியுள்ளனர். 203 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மூன்றாவது மாநிலம் மத்தியப்பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் மத்தியப்பிரதேச அரசு விமர்சனத்துக்குள்ளாக, இப்போதுதான் அந்த மாநிலத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சரை முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் நியமித்துள்ளார். கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கி ஒரு மாத காலத்துக்கு பிறகு, அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சராக நரோட்டம் மிஸ்ரா பதவியேற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2003- ம் ஆண்டு உமாபாரதி மத்தியப்பிரதேச முல்வராக இருந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சராக நரோட்டம் மிஸ்ரா பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பதவியேற்றுக்கொண்ட கையோடு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக கூட்டங்களை நடத்தி, கொரோனா தொடர்பான பணிகளை நரோட்டம் மிஸ்ரா முடுக்கிவிட்டுள்ளார். எனினும், உத்தரப்பிரதேசத்தில் பின்தங்கியுள்ள மருத்துவத்துறை, விழிப்புணர்வு குறைவாகவுள்ள மக்கள் காரணமாக, கொரோனாவை கட்டுப்படுத்துவது சவால் மிகுந்ததாகவே இருக்கிறது.

இந்தியாவில், உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம். எனவே, இனிமேலாவது மத்தியப்பிரதேச அரசு விழித்துக்கொண்டு செயல்பட்டால், மட்டுமே மக்களைக் காப்பாற்ற முடியும். இதற்கிடையே, மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகமானதற்கு தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்தான் காரணம் என மத்தியப்பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் குற்றம் சாட்டியுள்ளார்.

மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாயாருக்குக் கொரோனா தொற்று! - தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர்

இதுகுறித்து ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட்டனர். இந்தூர், போபால் போன்ற நகரங்களிலும் மக்களுடன் கலந்துவிட்டனர். தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளவும் முன்வரவில்லை. இதனால், மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகமாகி விட்டது. மக்களிடையே இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும் நோய் பரவலுக்கு முக்கியக் காரணமாகிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த கமல்நாத் அரசு, முறையான சோதனைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் தீவிர பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா கட்டுக்குள் வரும்'' என்று கூறியிருக்கிறார்.

இந்தியக் கொரோனா நோயாளிகளில் 80% பேர் அறிகுறிகளற்ற ஏசிம்ப்டமடிக்... ஏன், என்ன, எப்படி? #VikatanExplainer
லாக்டௌனில் இந்தியா
லாக்டௌனில் இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 52 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்த மாநிலத்தின் வர்த்தக மையமான இந்தூரில், 900 கொரோனா நோயாளிகள் உள்ளனர். தலைநகர் போபாலில் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் இந்தூர், போபாலைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு