Election bannerElection banner
Published:Updated:

`நீயெல்லாம் ஒரு ஆளா?’ - 4 மணிநேரக் காத்திருப்பு; வைத்திலிங்கத்தை வசைபாடிய இளைஞர்- என்ன நடந்தது?

அம்மா கிளினிக் திறப்புவிழாவுக்கு வந்த வைத்திலிங்கம்
அம்மா கிளினிக் திறப்புவிழாவுக்கு வந்த வைத்திலிங்கம்

`அம்மா மினி கிளினிக்’ திறப்புவிழாவுக்கு வைத்திலிங்கம் எம்.பி தாமதமாக வந்ததால், இளைஞர் ஒருவர் வைத்திலிங்கத்தின் கார் கதவை சாத்தவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே அ.தி.மு.க எம்.பி-யான வைத்திலிங்கம் `அம்மா மினி கிளினிக்’ திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்கு குறித்த நேரத்துக்குச் செல்லாமல் தாமதமாகச் சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சொந்தக் கட்சிகாரர் ஒருவரே வைத்திலிங்கத்தைத் தகாத வார்த்தைகளால் பேசித் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க எம்.பி வைத்திலிங்கம்
அ.தி.மு.க எம்.பி வைத்திலிங்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி `அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை அறிவித்து, தொடங்கிவைத்ததுடன் தமிழகம் முழுவதும் `மினி கிளினிக் தொடங்கப்படும்’ என்றார். அதன்படி `அம்மா மினி கிளினிக்’ தொடங்கப்பட்டுவருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 70 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மேலவை எம்.பி-யுமான வைத்திலிங்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கிவைத்துவருகிறார். இதேபோல் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மினி கிளினிக்குகளைத் தொடங்கிவைத்தார்.

காரில் வைத்திலிங்கம்
காரில் வைத்திலிங்கம்

இதற்காக ஒவ்வோர் இடத்திலும் அ.தி.மு.க-வினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தால் எப்படி வரவேற்பு கொடுப்பார்களோ அதேபோல் வைத்திலிங்கத்துக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.இதனால் ஓர் ஊரிலிருந்து மற்ற ஊருக்குச் செல்வதற்கு நீண்ட நேரமாகிறது. மினி கிளினிக் திறக்கப்பட்ட பகுதியில் அ.தி.மு.க-வினர், ஆரத்தி எடுக்க வந்திருந்த பெண்கள், பொதுமக்கள் எனப் பலரும் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இந்தநிலையில், பட்டுக்கோட்டை அருகேஎயுள்ள ஒதியடிக்காடு கிராமத்துக்கு மினி கிளினிக்கைத் தொடங்கிவைக்க வைத்திலிங்கம் சென்றார். அப்போது அவருக்கு மலர் வளையம், பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர், குத்து விளக்கேற்றி மினி கிளினிக்கை அவர் தொடங்கிவைத்தார்.

மகனுக்காகக் குறிவைக்கும் வெல்லமண்டி; எச்சரித்த வைத்திலிங்கம்!-என்ன நடக்கிறது திருச்சி அதிமுக-வில்?

அடுத்த சில நிமிடங்களில் வேறு ஓர் இடத்துக்குச் செல்வதற்காக வேகமாகக் கிளம்பிய வைத்திலிங்கம் காரில் ஏறினார். அப்போது சிவிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவரான வைரவமூர்த்தி என்ற இளைஞர், வைத்திலிங்கத்தின் கார் கதவைச் சாத்தவிடாமல் தடுத்து, `நீயெல்லாம் ஒரு ஆளு... உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது’’ எனக் கேட்டுத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத வைத்திலிங்கம் அதிர்ச்சியடைந்தார். அருகிலிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனால் அந்த இடம் முழுவதுமே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தஞ்சை மாவட்ட அ.தி.மு.க-வினர் மத்தியில் ஹாட்டாபிக்காக பேசப்பட்டுவருகிறது.

அம்மா கிளினிக் திறப்பு விழாவில் வைத்திலிங்கம்
அம்மா கிளினிக் திறப்பு விழாவில் வைத்திலிங்கம்

என்ன நடந்தது என விசாரித்தோம். நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ``வைத்திலிங்கம் ஒதியடிக்காடு கிராமத்தில் மாலை 4 மணிக்கு அம்மா மினி கிளினிக்கைத் தொடங்கி வைப்பார் என முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்காகக் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் மதியத்திலிருந்தே காத்திருந்தனர்.

ஆனால், வைத்திலிங்கம் பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு வந்ததால் குறித்த நேரத்தில் ஒதியடிக்காட்டுக்கு வர முடியவில்லை. 4 மணிக்கு வர வேண்டியவர் 7 மணிக்குத்தான் வந்தார். காரில் வந்து இறங்கியபோதே, இளைஞர் ஒருவர் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அவரை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

தஞ்சாவூர்: `விதிமுறைகளை மீறி இரவு 7 மணிக்கு மேல் நிகழ்ச்சி!’ - சர்ச்சையில் வைத்திலிங்கம்

இதையடுத்து வைத்திலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி, அம்மா கிளினிக்கைத் தொடங்கிவைத்ததுடன், அதே வேகத்தில் திரும்பிச் செல்ல முயன்றார். காரில் ஏறிய அவரை, வைரவமூர்த்தி என்ற இளைஞர் கார் கதவைப் பிடித்துக்கொண்டு, `நீயெல்லாம் ஒரு ஆளு... உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது.. சொன்ன நேரத்துக்கு வரத் தெரியாதா...’ எனக் கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டினார்.

உடனே, காரைவிட்டு இறங்கிய வைத்திலிங்கம், `யார் நீ? இவனைப் பிடிச்சுக் கட்டுங்கடா’ என அருகிலிருந்த நிர்வாகிகளை பார்த்து ஆக்கோரஷமாகக் கத்தினார். உடனே வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் வைரவமூர்த்தியைத் தாக்கி விட்டால், நிலைமை மோசமாகும் என்பதை உணர்ந்த சிலர், வைரவமூர்த்தியைப் பேசி அனுப்பிவைத்தனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அதன் பிறகு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளைக் கடுமையாகத் திட்டினார் வைத்திலிங்கம். இந்தத் தகவல் கொஞ்ச நேரத்தில் மற்ற ஊர்களைச் சேர்ந்த அ.தி.மு.க வி-னருக்கும் பரவியது. வைத்திலிங்கத்தை இளைஞர் திட்டியது குறித்துப் பரபரபாகப் பேசிக்கொண்டனர். இதை எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாமல் அமுக்கும் முயற்சியில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் இறங்கினர்.

இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவரான பெரியதுரை மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வைரமூர்த்தியின் மீது வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்’’ என்றனர்.

அ.தி.மு.க தரப்பில் பேசினோம். ``இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து முடிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத வைரவமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவரான பெரியதுரை மீது இருந்த கோபத்தில் வைத்திலிங்கத்தைத் திட்டிவிட்டார்.

திமுக-வின் `ஸ்லீப்பர் செல்கள்’ திட்டம் முதல்`அம்மா மினி கிளினிக்’ மெகா குளறுபடிவரை கழுகார் அப்டேட்ஸ்

விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வைத்திலிங்கத்துக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும் நோக்கில் யாராவது பின்னணியில் இருந்துகொண்டு இதைச் செய்யவைத்தனரா எனவும் விசாரித்துவருகிறோம். காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுத்திருக்கிறோம்’’ என முடித்துக்கொண்டனர்.

`வைத்திலிங்கத்துக்காக 4 மணி நேரத்துக்கு மேலாகக் கால்கடுக்கக் காத்திருந்தோம். ஆனால் அவர் ரெண்டு நிமிஷத்துல நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஒரு சில வார்த்தைகள்கூட பேசாமல் உடனே திரும்பினார். இது எனக்குக் கோபத்தை வரவழைத்ததால், அப்படிப் பேசிவிட்டேன்’ என வைரவமூர்த்தி கூறியதாகவும், அ.தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்தனர்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இது தொடர்பாக மதுக்கூர் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம். ``வாகனத்தை வழி மறித்து, தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வைரவமூர்த்தியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன’’ என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு