Published:Updated:

`தனிமை முகாம்.. தவிக்கவிட்ட மருத்துவர்கள்' -மலேசியாவில் இருந்து ஊர் திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

கொரோனா
கொரோனா

நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இரவு 9 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்தது.

தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மலேசியாவிலிருந்து தமிழகம் வந்து கொரோனா முகாமில் தங்கியிருந்தவர் உயிரிழந்ததாக நாகை முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளருமான எம்.ஜி.கே நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

நிஜாமுதீன்
நிஜாமுதீன்

கொரோனோ தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த இந்தியர்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னைக்கு வரும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர், கொரோனோ ஆய்வு சோதனைக்குப் பின் வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறனர்.

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மலேசியாவிலிருந்து வந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது ஷரீப் என்பவர் முகாமில் தங்கியிருந்து எவ்வித மருத்துவ உதவியும் கிடைக்காமல் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி நிஜாமுதீனிடம் பேசினோம்.

``13 -ம் தேதி மாலை முஹம்மது ஷரீப்புக்கு நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. யாரும் சிகிச்சை அளிக்க வராத சூழலில் மீண்டும் 14-ம் தேதி காலை மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மீண்டும் அதிகாரிகளிடம் சிகிச்சைக்கு கோரிக்கை வைத்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அன்று மாலை சுமார் 7.30 மணி அளவில் முகமது ஷெரீப் ரத்தவாந்தி எடுத்து, குளியல் அறையில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக இந்தச் செய்தியும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை. அதன்பின் நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இரவு 9 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்தது. முஹம்மது ஷரீப்பை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் .

`மொத்தமே நான்கு ஆம்புலன்ஸ்தான்... பரவும் கொரோனா!' -கலங்கவைக்கும் நெல்லை, தென்காசி நிலவரம்

சுமார் 200-க்கு அதிகமான நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஒரு மருத்துவரோ ஒரு செவிலியரோ இல்லை. போதிய அடிப்படை மருத்துவ வசதிகளும் செய்யப்படவில்லை. அவசர உதவிக்கு ஓர் ஆம்புலன்ஸ்கூட இல்லை. அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் ஓர் உயிரை இழந்துவிட்டோம்" என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு