Published:Updated:

`ஆண்டுச் செலவு ரூ.6 கோடி; அமைச்சர் வெளியிட்ட ஆர்.டி.ஐ தகவல்!’ அதிர்ச்சியில் கிரண் பேடி

ஆளுநர் கிரண் பேடி
ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் மாளிகையின் செலவும் இருமடங்கு அதிகரித்திருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அதற்கான ஆர்.டி.ஐ தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.

மருத்துவ சீட் முறைகேடு புகாரால் மோதல்

புதுச்சேரியில் ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் அதிகார மோதல் நீடித்துவருகிறது. அரசுத்துறைகள் அனைத்திலும் ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் கிரண் பேடி. அதன்படி 2016-ம் ஆண்டு சென்டாக் அலுவகலத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர், ``தனியார் மருத்துவப் படிப்புக்கான சீட் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. ஆவணங்களை அழிப்பதற்கு முன் சி.பி.ஐ உடனே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று கூற சென்டாக் அலுவலகத்தில் நுழைந்தது சி.பி.ஐ. இந்த விவகாரத்தால் கடுப்பான சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆளுநர் கிரண் பேடியைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை
புதுச்சேரி ஆளுநர் மாளிகை

சில மாதங்களுக்கு முன்பு தனது ஏனாம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை என்று குற்றம் சுமத்திய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஆளுநர் கிரண்பேடி ஏனாம் தொகுதிக்கு ஆய்வுக்குச் சென்றபோது கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தார் மல்லாடி கிருஷ்ணாராவ்.

இருமடங்காக உயர்ந்த ஆளுநர் மாளிகை செலவு

இதற்கிடையில் புதுச்சேரி கடுமையான நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்து வருவதால், ஆட்சியாளர்கள் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார் கிரண் பேடி. ஆனால், இதுவரை ஆளுநர்களாக இருந்தவர்களைவிட, கிரண் பேடிதான் ஆளுநர் மாளிகையின் செலவுகளை இரண்டு மடங்காக உயர்த்தினார் என்று பதிலுக்குக் குற்றம் சுமத்தியிருந்தார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். தற்போது புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஆண்டுதோறும் செலவிடப்படும் நிதி விவரத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிட்டிருக்கிறார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

அமைச்சர் வெளியிட்ட அந்தத் தகவலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம்,

2010-2011 - ரூ. 3.09 கோடி

2011-2012 - ரூ. 2.91 கோடி

2012-2013 – ரூ. 3.82 கோடி

2013-2014 - ரூ. 3.50 கோடி

2014-2015 - ரூ. 3.55 கோடி,

2015-2016 - ரூ. 3.27 கோடி

2016-2017 - ரூ. 4.07 கோடி

2017-2018 - ரூ. 4.87 கோடி

2018-2019 - ரூ. 6.04 கோடி

2019-2020 - ரூ. 6.19 கோடி

செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கோடி ரூபாயைத் தாண்டிய ஆண்டுச் செலவு:

``2009 முதல் 2013 ஜூலை வரை இக்பால் சிங்கும், 2013 ஜூலை முதல் 2014 ஜூலை வரை வீரேந்திர கட்டாரியாவும், 2014 ஜூலை முதல் 2016 மே மாதம் வரை அஜய்குமார் சிங்கும் ஆளுநர்களாகப் பதவி வகித்தனர். 29.5.2016-ல் ஆளுநராகப் பொறுப்பேற்றார் கிரண் பேடி.

Vikatan

வெறும் 3 கோடி ரூபாய்க்குள் இருந்த ஆளுநர் மாளிகையின் செலவு, கிரண் பேடி பொறுப்பேற்ற பிறகு 6 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது" என்று கூறுகின்றனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் விளக்கத்தைப் பெற அவரது வாட்ஸப் எண்ணுக்கு தகவல் அனுப்பியிருந்தோம். ஆனால், இதுதொடர்பாக அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவரது தரப்பில் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு