Published:Updated:

ஆவின் புதிய தயாரிப்புகள்... அதிர்ச்சி சந்தேகங்கள்! `பொங்கும்' பால் முகவர் சங்கம்

ஆவின் பால்
ஆவின் பால்

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் புதிதாக 5 பால் பொருள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், 'இவையனைத்தும் ஆவின் நிறுவன பழைய தயாரிப்புகள்தான்' என்று சொல்லி அதிர வைக்கிறது பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம்.

'ஆவின் நிறுவனம் 5 வகையான புதிய பால் பொருள்களை அறிமுகம் செய்துள்ளது' என்ற அறிவிப்பால், மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வழிந்துகொண்டிருக்கும்போதே, அதன் மீது தண்ணீர் தெளித்து அடங்க வைத்திருக்கிறார்கள் பால் முகவர் சங்கத்தினர்.

'பால் நீண்ட நாள்கள் கெடாமலிருக்க தனியார் நிறுவனங்கள், ரசாயனம் கலப்பதாக ஏற்கெனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு கூறியிருந்தார். இப்போது ஆவின் நிறுவனமே 90 நாள்கள் கெட்டுப்போகாத பாலை அறிமுகப்படுத்தியுள்ளதே இது எப்படி..?' என்று அவர்கள் எழுப்பியிருக்கிற சந்தேகக் கேள்விதான் சாமான்யர்களை அதிரவைத்திருக்கிறது.

ஆவின் நிறுவன தயாரிப்பில், நேற்று புதிதாக 5 பால் பொருள்களை அறிமுகம் செய்துவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில், நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க மூலிகைப் பொருள்கள் கலந்த மோர், புதிய நறுமணங்களிலான லஸ்ஸி வகைகள், நீண்டநாள் கெட்டுப்போகாத பால் மற்றும் டீக்கடைகளுக்கென கொழுப்புச் சத்து மிக்க புதியவகை பால் என மொத்தம் 5 வகையான பால் பொருள்கள் அடங்கும்.

ஆவின் தயாரிப்புகள்
ஆவின் தயாரிப்புகள்

'தற்போது ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள தயாரிப்புகளில், 4 பொருள்கள் ஏற்கெனவே சந்தையில் இருப்பவைதான்...' என்ற அதிர்ச்சி ஓப்பனிங் கொடுத்துப் பேச ஆரம்பிக்கிறார்'பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி.

தொடர்ந்து இதுகுறித்துப் பேசுபவர், ''ஏற்கெனவே ஆவின் தயாரிப்பில், மோர், லஸ்ஸி போன்ற பால் பொருள்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது அதே பொருள்களில், சில நறுமண சுவையை மட்டும் சேர்த்து, புதிய பொருள் என்று அறிமுகப்படுத்தி செலவு கணக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக ஏற்கெனவே சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கக்கூடிய 'ஆவின் டீ மேட்' எனப்படும் செறிவூட்டப்பட்ட கொழுப்புச் சத்துப் பாலில் 6 சதவிகிதம் கொழுப்புச் சத்தும் 9 சதவிகிதம் திடச் சத்தும் உள்ளது. இதன் அதிகபட்ச விலையானது 51 ரூபாய். ஆனால், இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாலில், 6.5 சதவிகிதம் கொழுப்புச் சத்தும் அதே 9 சதவிகித திடச்சத்தும் இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். இதன் விலையோ 60 ரூபாய். அதாவது வெறுமனே அரை சதவிகிதம் கொழுப்புச் சத்தை மட்டும் அதிகப்படுத்திவிட்டு, ஒரு லிட்டர் பாலுக்கு 9 ரூபாய் விலையேற்றத்தையும் செய்து, 'புதிய பால் பொருள்' என்று அறிமுகப்படுத்தினால் இதைவிட ஒரு மோசடி இருக்க முடியுமா?

அடுத்ததாக 90 நாள்கள் வரையிலும் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய வகையிலான புதிய பால் பொருளை ஆவின் நிறுவனம் டெட்ரா பேக்கில் (Tetra pack) தயாரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவும்கூட ஏற்கெனவே ஒரு லிட்டர் அளவு பாக்கெட்டுகளாக ஆவின் தயாரித்துக்கொண்டிருப்பதுதான். இப்போது புதிதாக அரைலிட்டர் பாக்கெட்டுகளைத்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான், 2017-ம் ஆண்டு தனியார் நிறுவனங்களின் நீண்ட நாள் கெடாத பாலின் தன்மையைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, 'தனியார் பால் நிறுவனங்கள், பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக, ஃபார்மலின், ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு எனப்படும் ரசாயனங்களைக் கலக்கிறார்கள். இந்த ரசாயனங்கள் புற்று நோயை வரவழைக்கக்கூடியவை. மேலும், இறந்துபோன உடல்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் மருந்துவகையைச் சேர்ந்தது ஃபார்மலின்' என்றெல்லாம் விலாவாரியாகப் பேட்டி கொடுத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தார்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

இந்தநிலையில், தற்போது ஆவின் நிறுவனமே 90 நாள்கள் கெட்டுப்போகாத வகையில் பால் பொருள் தயாரிக்கிறது என்றால், இதிலும் அந்த வேதிப்பொருள் கலந்திருக்குமா இல்லையா..? அப்படி வேதிப்பொருள் கலக்கவில்லை என்று சொன்னால், அன்றைக்கு அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யா... அடுத்ததாக, இந்த டெட்ரா பேக் பால், 3 வித அடுக்குகளைக் கொண்ட உறைகளில்தான் அடைத்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதில், உட்புறம் உள்ள அலுமினிய உறை என்பது ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு ரசாயனம் கலந்த பொருள்தான். எனவே, இந்த வேதிப்பொருள் பாலில் கலப்பதற்கும் வாய்ப்பு உள்ளதே..?'' என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு அதிரவைத்தார்.

இதையடுத்து, பால் முகவர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகத் தரப்பிலான நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தோம்...

''மோர் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதுமே மக்கள் எல்லோரும் பயன்படுத்தி வருகிற உணவுப் பொருள்தான். புதிதாக ஒரு நிறுவனத்தினர் மோர் விற்பனையை ஆரம்பித்தால், 'மோர் என்பது ஏற்கெனவே உள்ள பொருள்தான்... புதிதாக யாரும் கண்டுபிடித்துவிடவில்லை' என்று யாராவது புகார் கூறினால் அவர்களது புரிதலைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது?

ஏற்கெனவே ஆவினில் தயாரிக்கப்பட்ட மோர் என்பது சாதாரணமானது. ஆனால், தற்போது அதில் பல்வேறு மூலிகைகளைக் கலந்து நோய் எதிர்ப்பு சக்திமிக்க உணவுப் பொருளாகத் தயாரித்திருக்கிறோம். குடித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

ஆவின் பால்
ஆவின் பால்

அதேபோல், லஸ்ஸியும்கூட இதற்கு முன்பு தயாரிக்கப்பட்டபோல் அன்றி, புதிதாக சாக்லேட், மாங்கோ சுவைகளில் நறுமணம் ஊட்டிய லஸ்ஸியாகத் தயாரித்திருக்கிறோம். இதுவரையில் தனியார் பால் நிறுவனங்களேகூட இதுபோன்ற லஸ்ஸியைத் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆவின் டீ மேட்' எனப்படும் செறிவூட்டப்பட்ட பால் என்பது முழுக்க முழுக்க வணிக நோக்கில் தயாரிக்கப்பட்டது. அதனால்தான் பாக்கெட்டிலேயே 'கமர்ஷியல்' என்று பிரின்ட் செய்துள்ளோம். ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்யக்கூடிய விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்றால், அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் இதுபோன்ற கமர்ஷியல் நடவடிக்கைகளைக் கையாளத்தான் வேண்டும்.

``வாபஸ் வாங்கச்சொல்லி, இந்து அமைப்பினர் மிரட்டினர்!'' - பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி

அடுத்ததாக, 90 நாள் வரையிலும் கெட்டுப்போகாத பால் என்பது ஆவினில் இப்போதுதான் முதன்முறையாகத் தயாரிக்கப்படுகிறது. இதற்கு முன் ஆவின் தயாரிப்பில் இந்த வகையான பால் வந்திருந்தால், புகார் சொல்பவர்கள் அந்தப் பாக்கெட்டுகளைக் காட்டலாமே. ஏற்கெனவே சேலத்திலிருந்து 'நறுமணப் பால்' பொருள் டெட்ரா பேக்கில் கொடுக்கப்பட்டது. அதைத்தான் விவரம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

சாதாரண பாலையே 90 நாள் வரையிலும் கெட்டுப்போகாத வகையில் தயார் செய்து ஃப்ளெக்ஸி பேக்கில், இப்போது கொடுத்து வருகிறோம். அதாவது 140 டிகிரி அளவில் பாலை சூடு செய்து, அடுத்த 2 நொடிகளில் அந்தப் பாலை அப்படியே குளிர்வித்துவிடுகிறோம். இதனால், அந்தப் பால், நீண்ட நாள் கெடாத வகையில் மாற்றப்பட்டுவிடுகிறது. பின்னர் 5 அடுக்குகள் கொண்ட ஃபெளெக்ஸி உறையில், பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. எனவே, இதற்கும் டெட்ரா பேக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அரசு நிறுவனம் இதுபோன்ற புதிய முயற்சிகளை செய்யும்போது, அதை வரவேற்காததுகூட பரவாயில்லை... ஆனால், ஆதாரமே இல்லாமல் இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது!'' என்றனர் கொதிப்போடு.

இதையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அமைச்சரது செல்பேசியைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து அமைச்சரின் செல்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளதோடு, அவரின் உதவியாளரிடமும் விவரம் கூறினோம். 'அமைச்சரிடம் தகவல் தெரிவித்து பேசச் சொல்கிறேன்' என்றார்.

அமைச்சர் தரப்பில், விளக்கம் கிடைக்கும்பட்சத்தில், அதையும் இக்கட்டுரையோடு பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு