திண்டுக்கல்: `இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி..!’ - சர்ச்சையான அமைச்சர் சீனிவாசன் பேச்சு

அரசு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்ச்சையாகவும் காமெடியாகவும் பேசிவதில் புகழ்பெற்றவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பேச்சில் மட்டுமல்ல, சிறுவனை தனது காலணிகளை எடுக்கச் சொல்லி செயலிலும் சர்ச்சையில் சிக்கியவர். தற்போது அரசு விழாவில் அவர் பேசிய பேச்சு, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்குட்பட்ட கணவாய்ப்பட்டி, முளையூர் பகுதிகளில் நேற்று மினி கிளினிக்குகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் நத்தம் பகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். உடன் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``எந்தத் திட்டத்தைச் செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். ரூ.2,500 ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் பரிசு கொடுக்கிறோம். கூடவே வேட்டி, சேலை கொடுக்கிறோம். மொத்த மதிப்பு ரூ.3,000. இதை ஏமாற்று வேலை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
`மாமியார் உடைத்தால் மண் குடம், மருகமள் உடைத்தால் பொன்குடம்’ என்பதுபோல இருக்கிறது. தி.மு.க ஆட்சியில், அவங்க அப்பா இதெல்லாம் செய்திருந்தால், புத்தர் வாரிசு, இயேசுநாதர் வாரிசு என்பார்கள். நாங்கள் செய்திருந்தால், இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி... எது செஞ்சாலும் தப்பு. `நன்மை செய்வோம்’னு சொல்லித்தான் ஓட்டுக் கேட்டு வந்திருக்கோம்” என்றார்.

`இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு’ என அமைச்சர் பேசியதும், மேடையில் அமர்ந்திருந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.