Published:Updated:

தஞ்சை: `வரவு, செலவுக் கணக்கு; கைவிரித்த மகன்?’ - துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது பின்னணி

துரைக்கண்ணு
துரைக்கண்ணு ( ம.அரவிந்த் )

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டிருப்பது, அவரின் ஆதரவாளர்களை மட்டுமன்றி அவரின் மகன் ஐயப்பனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் எனச் சொல்லப்படும் ஐந்து பேர் நேற்று இரவு கும்பகோணத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது துரைக்கண்ணு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல்வருடன் துரைக்கண்ணு
முதல்வருடன் துரைக்கண்ணு

வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 31-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு துரைக்கண்ணுவின் உடல் எடுத்துவரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

துரைக்கண்ணு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்
துரைக்கண்ணு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்

துரைக்கண்ணுவின் இளைய மகன் ஐயப்பன், அ.தி.மு.க-வின் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருக்கிறார். இந்தநிலையில் துரைக்கண்ணு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அ.தி.மு.க தலைமைக்கும், துரைக்கண்ணுவுக்கும் இடையே நடந்த கொடுக்கல் வாங்கல் குறித்த கணக்குகளை முதல்வர் தரப்பு ஐயப்பனிடம் கேட்டதாகத் தெரிகிறது.

`எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாமே அப்பாவுக்குத்தான் தெரியும்’ என கையை விரித்திருக்கிறார் ஐயப்பன். இதில் தலைமை கொடுத்த அழுத்தத்தால் ஐயப்பன் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. துரைக்கண்ணு உடல் சொந்த ஊருக்கு வந்து சேர்வதற்கு முன்பே ஐயப்பன் அ.தி.மு.க-வின் லோக்கல் வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளியேறியதற்கும் இதுதான் காரணம் எனச் சொல்லப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள பெரியவன் என்கிற முருகன்
கைது செய்யப்பட்டுள்ள பெரியவன் என்கிற முருகன்

இந்த நிலையில், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்களாக இருந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரான பெரியவன் என்கிற முருகன், அ.ம.மு.க-வின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரான சுரேஷ்குமார், கும்பகோணம் முன்னாள் நகர பா.ம.க செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா, முருகனின் சகோதரி மகன் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று இரவு கும்பகோணத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்: `எளிமையே உயர்த்தியது!’ - அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் உருகும் தொகுதி மக்கள்

இதையடுத்து பெரியவன் முருகனின் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் ஐ.ஜி ஜெயராம் கும்பகோணத்தில் முகாமிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். நான்கு மாவட்ட எஸ்.பி-க்கள் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

கைதுசெய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில்வைத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் நெருக்கமாக இருந்தவர்கள் திடீரெனக் கைதுசெய்யப்பட்டிருப்பது அவரின் ஆதரவாளர்களை மட்டுமன்றி ஐயப்பனையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து விசாரித்தோம். ``கும்பகோணம் மனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியவன் என்கிற முருகன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கும்பகோணம் பகுதி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், கள்ளப்புலியூர் ஊராட்சிமன்றத் தலைவராகவும் இருக்கிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், துரைக்கண்ணுவுக்கு எல்லாமுமாக இருந்தார். சொல்லப்போனால் இவரை துரைக்கண்ணுவின் பினாமி என்றுதான் அ.தி.மு.க வட்டத்தில் சொல்வார்கள்.

துரைக்கண்ணு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்
துரைக்கண்ணு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்

முருகன் மீது வழக்குகள் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைகொள்ளாமல் துரைக்கண்ணு அவரை வளர்த்துவிட்டார். துரைக்கண்ணு பினாமி பெயரில் சொத்துகள் வாங்கியதற்கு அனைத்து உதவிகளையும் செய்துவந்தார் முருகன். இதற்கு மற்ற நால்வரும் பக்கபலமாக இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. சில வருடங்களில் முருகன் வளமான ஆளாக வலம்வரத் தொடங்கினார். துரைக்கண்ணு மகன் ஐயப்பனிடமும் முருகன் நெருக்கமாக இருந்துவந்தார். அ.தி.மு.க தலைமை பெரும் தொகையை துரைக்கண்ணுவிடம் கொடுத்திருந்தது. அதற்கான வரவு, செலவு கணக்குகள் முழுமையாக வந்து சேரவில்லை.

இதனால், துரைக்கண்ணு தரப்பில் பெரும் தொகை இருப்பதாகக் கூறப்படுகிறது. கணக்கு வழக்கு விவரத்தையும், பணம் எங்கிருக்கிறது என்பதையும் ஐயப்பனிடம் ஆளும் தரப்பு கேட்டிருக்கிறது. ஆனால், `அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது’ என ஐயப்பன் கூறிவிட்டார்.

கொரோனா தொற்று; உடலுறுப்புகள் பாதிப்பு! - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் #NowAtVikatan

இதற்கிடையில் சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு பெரிய கடைத்தெருவிலுள்ள வணிக வளாகம் ஒன்று வங்கி மூலம் ஏலத்துக்கு வந்திருக்கிறது. சுமார் 2 கோடி மதிப்புகொண்ட அந்தக் கட்டடத்தை ரூ. 67 லட்சத்துக்கு முருகன் தரப்பு ஏலம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

துரைக்கண்ணு சிகிச்சையில் இருந்த சமயத்தில் இது நடந்ததால், பலவிதமான கேள்வியை எழுப்பியது.ஐயப்பன் இதன் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. துரைக்கண்ணு பினாமி பெயரில் ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அவை பற்றிய அனைத்து விவரமும் முருகன் அண்ட் கோவுக்கு நன்றாகத் தெரியும்.

சாலை மறியல்
சாலை மறியல்

ஐயப்பனிடம் பேசி, தகவல் எதுவும் கிடைக்காததால், துரைக்கண்ணு மற்றும் ஐயப்பனிடம் நெருக்கமாக இருந்த ஐந்து பேரை போலீஸார் மூலம் கைது செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை. இன்னும் பலருக்கு வலை வீசியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 பேர் வரை கைது லிஸ்ட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் துரைக்கண்ணு மற்றும் அவரின் மகன் ஐயப்பனிடம் நெருக்கமாக இருந்த ஆதரவாளர்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

போலீஸ் தரப்பில் கைது செய்ததற்கான சரியான விளக்கத்தை தெரிவிக்கவில்லை. கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டது, சொத்துகளை மிரட்டி வாங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காகவும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி கேமரா... 2 சட்டை! - துப்பாக்கித் திருட்டில் நண்பருடன் கும்பகோணம் போலீஸ் சிக்கிய பின்னணி

இந்தச் சம்பவத்தால் கும்பகோணம் அரசியல் வட்டம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இது தொடர்பாக ஐயப்பனிடம் விளக்கம் கேட்பதற்கு போன் செய்தோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு