Published:Updated:

`தி.மு.க ஜெயிச்சா போதுமா, நிதியை நாங்க தானே ஒதுக்கணும்!’- அமைச்சர் கருப்பணன் சர்ச்சைப் பேச்சு

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன்

தி.மு.க வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை அம்மா வழியிலான அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால்தான் தி.மு.க சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இப்ப சத்தியமங்கலத்துல தி.மு.க சேர்மன் வந்துட்டாங்க. அவங்களால என்ன செய்ய முடியும். அவங்க ஜெயிச்சாலும் நாமதான் ஆளுங்கட்சி, நாம பண உதவி கொடுத்தாத்தான் அவங்க வேலை செய்ய முடியும். நாம பணம் கொடுக்கலைன்னா அவங்க எப்படி வேலை செய்வாங்க. சத்தி ஒன்றியத்துல என்ன அடிப்படை வசதிகள் வரும். எதுவுமே வராதே. தி.மு.க-வில் வெற்றி பெற்ற சேர்மன்களிடம் பணம் கம்மியாகத்தான் கொடுப்போம்” எனக் கூறினார்.

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன்

தி.மு.க வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்குக் குறைவான நிதியையே ஒதுக்குவோம் என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் கருப்பணன், ``தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தயாரிக்கின்ற அத்தனை தொழிற்சாலைகளையும் மூடியிருக்கிறோம். பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருகிறோம்.

ஆனாலும், ஒருசிலர் கர்நாடகா, ஆந்திராவில் இருந்துகொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரஜினியின் பேச்சு என்பது அவரோட விருப்பம். அதையெல்லாம் நாம் பெருசாக எடுத்துப் பேச வேண்டியதில்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதைப் பூர்த்தி செய்வதில்தான் எங்கள் அரசு கவனமாக இருக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு