Published:Updated:

விழுப்புரம்: போராடிய கிராம மக்களிடம் தடித்த வார்த்தை... மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி!

அமைச்சர் பொன்முடி

பொதுமக்களுடனான பேச்சுவார்த்தையின்போது, திடீரென கோபமடைந்த அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த ஒருவரைப் பார்த்து கடுமையான தடித்த வார்த்தையைப் பயன்படுத்தி, திட்டியதாக வெளியாகியிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: போராடிய கிராம மக்களிடம் தடித்த வார்த்தை... மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி!

பொதுமக்களுடனான பேச்சுவார்த்தையின்போது, திடீரென கோபமடைந்த அமைச்சர் பொன்முடி, அங்கிருந்த ஒருவரைப் பார்த்து கடுமையான தடித்த வார்த்தையைப் பயன்படுத்தி, திட்டியதாக வெளியாகியிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
அமைச்சர் பொன்முடி
"மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப்போலத்தான் இருக்கிறது என்னுடைய நிலைமை. நாள்தோறும் காலையில், நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கியிருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பைப் பாருங்கள்" - என்று  தி.மு.க-வின் 15-வது பொதுக்குழுவில் தனது மனக்குமுறல்களை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இவ்வாறு அவர் நொந்து போய்ப் பேசுவதற்கு சில முக்கிய தி.மு.க தலைவர்களின் சர்ச்சைச் செயல்பாடுகள் காரணமாக அமைந்திருந்தன. அவர்களில் ஒருவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முகையூர் ஒன்றியக்குழு பெண் தலைவரைப் பார்த்து, “ஏம்மா… நீ எஸ்.சி-தானே?” என மேடையில் கேட்டதும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பணிப்பதை `ஓசி’ என கொச்சையாகப் பேசியிருந்ததும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதேபோல், அக். 2-ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பெண் ஒருவரை ஒருமையில் பேசியதும் சர்ச்சையானது. இந்தச் சூடு தணிவதற்குள், மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அவர்.

பொன்முடி, ஸ்டாலின்
பொன்முடி, ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாகப் பிரித்து, டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமம் உருவாக்குவதற்கான பணிகள் வருவாய்த்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்கு உட்பட்ட இந்த சித்தலிங்கமடம் ஊராட்சியை  இரண்டாகப் பிரிப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஆனால், அந்த ஊராட்சியை இரண்டாகப் பிரிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இதற்கு எதிப்பு தெரிவித்து நேற்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள், கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் போராட்டத்தைக் கைவிடும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. எனவே, நேற்று மதியம் அந்த கிராமத்துக்கு வந்த அமைச்சர் பொன்முடி, அந்த மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றிருக்கிறார். அப்போது, கொட்டும் மழையிலும் அவரை முற்றுகையிட்ட ஊர் பொதுமக்கள், சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பொன்முடி
பேச்சுவார்த்தையில் பொன்முடி

சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக நீண்ட பொதுமக்கள் - அமைச்சருடனான இந்தப் பேச்சுவார்த்தை, ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியிருக்கிறது. திடீரென கோபம்கொண்ட அமைச்சர் பொன்முடி, அவருக்குப் பின்பகுதியில் இருந்த ஒருவரைப் பார்த்து கடுமையான தடித்த வார்த்தையைப் பயன்படுத்தி ஒருமையில் திட்டியிருக்கிறார். இதற்கான வீடியோ காட்சிகளும் தற்போது வேகமாகப் பரவிவருகின்றன. உடனே, காவல்துறை அதிகாரிகளுடன் அந்தப் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க-வின் கழக துணைப் பொதுச்செயலாளராகவும், உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கும் பொன்முடி தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சைகளில் சிக்கிவருவது கட்சி நிர்வாகிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.