திருச்சி: அடுத்தடுத்த புகார்கள்; திடீர் ஆய்வு! - விதிகளை மீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்?

இந்திய அளவில் பிளாஸ்மா பரிசோதனை செய்வதற்கு 44 பரிசோதனை மையங்களை அமைக்க ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது.
சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் விதிகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

கொரோனா விவகாரம் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் அதன் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கண்ணன் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை முறையாகக் கவனிப்பதில்லை என்றும் அங்கு நடக்கும் அவலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுப்பியிருந்தார். அடுத்தடுத்து புகார்கள் வரவே, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஆய்வு செய்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியவர், ”திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 600 படுக்கைகள் உள்ள நிலையில் அது தற்போது ஆயிரமாக உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், அதிகரிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 16,54,000 கொரோனா சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 45,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக இறப்பு விகிதமானது குறைந்து வருகிறது. கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை தேவை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நமக்கு எதிரி அல்ல. ஆனால் கொரோனா வைரஸ் நமக்கு எதிரி. எனவே தொற்று பாதிக்கப்பட்டவரை அன்புடன் நடத்த வேண்டும்.
இந்திய அளவில் பிளாஸ்மா பரிசோதனை செய்வதற்கு 44 பரிசோதனை மையங்களை அமைக்க ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல அளவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நாளொன்றுக்கு நான்கு முதல் 60 லிட்டர் வரையிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே, தேவையைக் கருத்தில் கொண்டு தற்போது சிலிண்டர் புதிதாக அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மருத்துவமனையை பொறுத்தவரையிலும் கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள் சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
சுமார் 25 நிமிடம் நீடித்த இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கவில்லை என வேதனைப்படுகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.