Election bannerElection banner
Published:Updated:

`டெல்லி சலோ’ போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான்! - அமைச்சர் கருத்தால் சர்ச்சை

ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே
ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே

மத்திய இணை அமைச்சர் ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே, வரலாறு காணாத வகையில் நடந்துவரும் இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இருப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லியின் மூன்று எல்லைகளில் அவர்கள் நடத்திவரும் போராட்டம் இரண்டாவது வாரத்தைக் கடந்திருக்கிறது. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக இருக்கும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைவதால் இதை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விவசாய அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்ச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை (08.12.2020) அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படாததால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில், மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை இணை அமைச்சரான ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே (Raosaheb Danve), இந்தப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தின் பத்னாபூர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சுகாதார மையத்தின் திறப்புவிழாவில் அமைச்சர் ராவ்சாஹேப் தாதாராவ் தன்வே கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், ``டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மறைமுகமாகச் செயல்பட்டுவருகின்றன. விவசாயிகளைத் தவறான நோக்கில் தூண்டிவிட்டு, நாட்டைச் சீர்குலைக்க அவர்கள் முயல்கின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த அமித் ஷா முயற்சி! -அடுத்தகட்ட நகர்வு என்ன?

முதலில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி குறித்து என்ன கூறப்பட்டது? `அந்தச் சட்டங்களால் ஆறு மாதங்களில் இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என்பது போன்ற தவறான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது?

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

அந்த நோக்கம் வெற்றி பெறாததால், தற்போது விவசாயிகளைத் தூண்டிவிடுகிறார்கள். மோடி இந்த நாட்டின் விவசாயிகளுக்கான பிரதமர். அவர் முடிவுகள் என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்தார்.

தன்வேயின் கருத்துகளுக்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அரவிந்த் சாவந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``பா.ஜ.க-வினர் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், தங்களது சுயத்தை இழந்துவிட்டனர். என்ன பேசுகிறோம் என்ற ஒரு தெளிவின்றிப் பேசிவருகின்றனர்” என்று விமர்சித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு