விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணோச்சார்யா விருது ஆகிய விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, விளையாட்டுத்துறையில் மிகச் சிறந்த சாதனைகளை நிகழ்த்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ம் தேதியன்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதின் பெயரை இன்று பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், `கேல் ரத்னா விருதை, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யுமாறு பலரிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்தது. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என்று இந்த விருது அழைக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார். ஊர்ப் பெயர்களைத்தான் இதுவரை பா.ஜ.க அரசு மாற்றிவந்தது. தற்போது விருது பெயரையும் மாற்றியிருக்கிறது என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகையிடம் கேட்டோம். ``ராஜீவ் காந்தி, இந்தியாவின் பெருமைக்குரிய ஒரு தலைவர். முன்னாள் பிரதமரான அவர், நவீன இந்தியாவை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்காற்றியவர். இந்த நாட்டுக்காக உயிர் தியாகத்தை செய்தவர். அவ்வளவு பெருமைக்குரியவர் என்பதால்தான், இந்த உயரிய விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
மொரார்ஜி தேசாய் அரசு, வி.பி.சிங் அரசு, வாஜ்பாய் அரசு ஆகிய அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கும் விருதுகளுக்கும் பல பெயர்களை சூட்டியுள்ளன. அந்தப் பெயர்கள் எதுவுமே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது கிடையாது. பா.ஜ.க அரசு பெயரை மாற்றும் வேலையில் ஈடுபடுவது என்பது வரலாற்றை மாற்றும் செயல், வரலாற்றை மறைக்கும் செயல். இது ஓர் அப்பட்டமான பாசிசம் தவிர வேறொன்றுமில்லை” என்றார்.
