Published:Updated:

பணிகளே நிறைவடையாமல் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்த மூக்கையூர் துறைமுகம்... குமுறும் மீனவர்கள்!

பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு முதல்வரால் அவசர அவசரமாகத் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் துறைமுகம், கடந்த 6 மாதங்களாகப் பயனற்றுக் கிடக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முழுமையடையாத மூக்கையூர் துறைமுகம்
முழுமையடையாத மூக்கையூர் துறைமுகம் ( Vikatan / U. Pandi )

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்பு தொழிலுக்காக மூக்கையூரில் பல கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் தவறான திட்டத்தால் அது செயல்பாடின்றி முடங்கிக்கிடக்கிறது.

மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்
மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்

தமிழகத்தின் நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டது ராமநாதபுரம் மாவட்டம். இந்தக் கடல் பரப்பு லட்சக்கணக்கான மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. பருவநிலை மாற்றம், மீன் வரத்துக் குறைவு, டீசல் விலை உயர்வு, குறுகிய கடல் எல்லை போன்ற பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில் மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மட்டும் சுமார் 1,100 விசைப்படகுகள் உள்ளன. பாறைகள் நிறைந்த ஆழம் குறைவான கடல் பகுதியைக் கடந்து மீன்பிடிக்கச் சென்றால் சிறிது நேரத்திலேயே இலங்கை கடல்பரப்பு வந்துவிடுகிறது. இதனால் எல்லைதாண்டிச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது காலங்காலமாகத் தொடர்கிறது.

எல்லை தாண்டும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கையின் பிடியிலிருந்து இந்திய அரசு மீட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் இந்திய விசைப்படகுகளை விடுவிப்பதில்லை. இதனால் மீனவர்கள் படகுகளை இழந்து வாழ வழியின்றி தவித்துவருகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் ஆழ்கடல் மீன்பிடித் திட்டம். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல்பரப்பு ஆகிய இரண்டும் ஆழம் குறைவானவை. இங்கிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல ஏதுவாகச் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூரில் புதிய துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்தன.

துறைமுகப்  பகுதியில் உருவாகியுள்ள மணல் திட்டு
துறைமுகப் பகுதியில் உருவாகியுள்ள மணல் திட்டு

ரூ.114 கோடி செலவில் மூக்கையூரில் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடந்தன. புதிதாக அமைக்கப்பட்ட துறைமுகம், கரையிலிருந்து கடலை நோக்கி நீளவாக்கில் அமைக்கப்படாமல் அலைகளும், மணலாலும் தூர்ந்து போகும் வகையில் குறுக்குவாக்கில் அமைக்கப்பட்டது. மீனவர்களின் ஆலோசனையை ஏற்காமல் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தில் தங்கள் படகுகளை நிறுத்த முடியாது என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் துறைமுகப் பணிகளைத் தொடர்ந்தனர்.

`மழைநீர்...மூங்கில் கம்பு...நடுக்கடலில் 5 நாள்கள்! - திக்..திக் அனுபவம் பகிர்ந்த மீனவர்

இந்நிலையில், கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் வருவதற்கு முன் மூக்கையூர் துறைமுகத்தைத் திறக்கத் தமிழக அரசு முடிவுசெய்தது. இதனால் பணிகள் முழுமையடையும் முன்னரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 6 மாதங்களுக்கு முன் துறைமுகத்தைத் திறந்துவைத்தார். ஆனால், இன்று வரை துறைமுகப் பணிகள் முடிவடையவில்லை.

இதுகுறித்துப் பேசும், பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, "துறைமுகங்கள் அனைத்துமே அதிகாரிகளின் தவறான திட்டமிடுதலால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பாம்பன் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள புதிய துறைமுகங்களில் விசைப்படகுகளை நிறுத்தமுடியவில்லை. கடலின் உட்புறத்தை நோக்கி துறைமுக தளம் அமைக்கப்படவில்லை.

இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகும் மீனவர்களின் நலனுக்காக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, பாலம் ஆகிய பகுதிகளில் புதிய துறைமுகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில் மூக்கையூரில் மட்டும் ரூ.113.9 கோடி செலவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான துறைமுகமும் அமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் 3 கோடி முதல் 50 கோடி வரையிலான சிறு சிறு துறைமுகங்கள் அமைக்கப்பட்டன. இறுதியாகப் பாம்பன் குந்துகாலில் 80 கோடி ரூபாய் செலவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான துறைமுகப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தத் துறைமுகங்கள் அனைத்துமே அதிகாரிகளின் தவறான திட்டமிடுதலால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பாம்பன் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள புதிய துறைமுகங்களில் விசைப்படகுகளை நிறுத்த முடியவில்லை.

Vikatan

கடலின் உட்புறத்தை நோக்கித் துறைமுக தளம் அமைக்கப்படவில்லை. இதனால் அலைகளாலும், அலைகளால் கரைப் பகுதிக்கு இழுத்து வரப்படும் மணலாலும் துறைமுக துவாரங்கள் தூர்ந்து கிடக்கின்றன. இதே நிலைதான் மூக்கையூரிலும் உள்ளது. மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப்படும் விசைப்படகுகள் புதிய துறைமுகத்ததுக்கு வரும் வழிகளில் நிறைய பாறைகள் உள்ளன. காற்றின் வேகத்தால் ஆங்காங்கே மணல் திட்டுகளும் உருவாகியுள்ளன. இவற்றை எல்லாம் சரிசெய்யாமல் அரைகுறையான நிலையில் துறைமுகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். தேர்தலுக்காக இவர்கள் நடத்திய அவசர திறப்பு விழாவால், மூக்கையூர் துறைமுகம் முழுமையடையாமல் முடங்கியுள்ளது. எனவே, மீனவர்களின் ஆலோசனையுடன் விசைப்படகுகளை நிறுத்தும் வகையில் மூக்கையூர் துறைமுகப் பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.'' என்றார்.