Published:Updated:

கான்டிராக்டர்கள் தவறா.. குப்பை வண்டியில் ஏற்றிச்செல்லப்படும் தூய்மைப் பணியாளர்கள்! - ஆற்காடு சர்ச்சை

குப்பை வண்டியில் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்
குப்பை வண்டியில் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்

குப்பை வண்டியில் தூய்மைப் பணியாளர்களை ஏற்றிச்செல்லும் அவலம், ஆற்காடு நகராட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

கொரோனாவால் இறந்தவரின் உடலிலிருந்து தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அனைவருமே பின்வாங்கும் சூழலில், அந்த உடலைத் தொட்டுத் தூக்கி அடக்கம் செய்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். நிரந்தரப் பணியாளர்கள் ஒருவர் கூட இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. மிகக் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களின் சேவையும் உயிரைப் பணயம் வைக்கும் தியாகமும் என்றென்றும் போற்றுதலுக்குரியவை. எனினும், தற்காலிகப் பணியாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

குப்பை வண்டியில் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்
குப்பை வண்டியில் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்

அதிகார வரம்புக்குள் அடக்கப்பட்டுள்ளதால் ஆட்டு மந்தைகளைப்போல் வழிநடத்தப்படுவதாக உள்ளாட்சி அமைப்புகள் மீது தொடர்ச்சியாகப் புகார்கள் குவிக்கின்றன. இந்த அவலநிலைக்கெல்லாம் உச்சக்கட்டமாக, ஆற்காடு நகராட்சியில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்களைக் குப்பை வண்டியில் அடைத்து அழைத்துச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் 65-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கொரோனா பேரிடர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தினமும் காலையில் நகராட்சியின் குப்பை வண்டியில் அழைத்துவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறார்கள். மீண்டும் மாலை நேரத்தில் அதே குப்பை வண்டியில் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆட்கள் அதிகம் தேவைப்படுவதால் பல்வேறு கிராமங்களிலிருந்து குப்பை வண்டிகளில் இருபது, இருபது பணியாளர்களாக ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். சமூக இடைவெளி சுத்தமாக கடைப்பிடிக்கப்படவில்லை. போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு கேட்கும் தூய்மைப் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகத்தினர் கடிந்துகொள்வதாக கூறப்படுகிறது.

குப்பை வண்டியில் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்
குப்பை வண்டியில் செல்லும் தூய்மைப் பணியாளர்கள்

இந்த அவலநிலை குறித்து ஆற்காடு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஆனந்த பத்மநாபசாமியிடம் விளக்கம் கேட்டோம். ``குப்பை வண்டியில் அழைத்துவரப்பட்ட அனைவருமே தற்காலிகப் பணியாளர்கள்தான். அவர்களை அழைத்துவரவும், திருப்பிக் கொண்டு சென்றுவிடவும் தனியார் கல்லூரிப் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம். தூய்மைப் பணியாளர்களுக்கு முகக் கவசம் வழங்கி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறோம். அப்படியிருக்க கான்டிராக்டர்கள் மூலம் இந்தத் தவறு நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட அந்த கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இனி, இதுபோன்ற தவறு நடக்காது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு