Published:Updated:

``அமைச்சரின் ஈகோ காரணமாக மரணம்?''- மருத்துவர் லட்சுமி நரசிம்மன் இறப்பால் கொதிக்கும் மனைவி

மனைவி கண்ணீர்
மனைவி கண்ணீர் ( எம். விஜயகுமார் )

மருத்துவர்கள் சம்பள உயர்வுப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றியவர். நேற்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.

``தமிழ்நாடு முழுவதும் உள்ள 18,000 மருத்துவர்களுக்கு வெறும் 310 கோடி கேட்டார்கள். இத்தொகை அரசுக்கு சாதாரணமானது. இத்தொகை கொடுக்காமல் பணியிடை மாற்றம் செய்து பலி வாங்கினார்கள். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக மன அழுத்தத்தில் என் கணவர் இறந்துள்ளார்.''

லட்சுமி நரசிம்மன்
லட்சுமி நரசிம்மன்
எம். விஜயகுமார்

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருப்பவர் லட்சுமி நரசிம்மன். இவர் தன் மனைவி அனுராதா மற்றும் மகன்கள் நந்தகுமார், சுபாஷ், சந்திரபோஸ் ஆகியோரோடு மேட்டூர் ராமன் நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த மருத்துவர்கள் சம்பள உயர்வு போராட்டத்தில் மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றியவர். நேற்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மருத்துவர்கள் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவருடைய மரணத்துக்கு தமிழக அரசும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்தான் காரணம் எனக் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

சாமிநாதன்
சாமிநாதன்
எம். விஜயகுமார்

இதுபற்றி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், ''கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றியவர். அரசு மருத்துவர்களின் உரிமைக்காகப் போராடக்கூடியவர். மருத்துவர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்கக்கூடியவர். அதே வேளையில் ஏழை நோயாளிகளுக்காகவும் அள்ளும் பகலும் அயராது பாடுபடக் கூடிய மனிதர். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவர்.

சமீபத்தில் நடைபெற்ற மருத்துவர்கள் ஊதிய உயர்வு போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தார். சேலத்திலிருந்து 200 முறைக்கு மேல் சென்னைக்குச் சென்று சுகாதாரத்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். லட்சுமி நரசிம்மன் மரணத்துக்குத் தமிழக அரசும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்தான் காரணம். அவர்கள் சம்பள உயர்வு கொடுத்திருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்'' என்றார்.

அனுராதா
அனுராதா
எம். விஜயகுமார்

இதுபற்றி மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா, ``தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டுமென்று 43 முறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். மூன்று முறை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். வெளிநாடு சென்று திரும்பிய பிறகு, சம்பளம் உயர்த்துவதாகச் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அரசு மருத்துவர்களை அலட்சியப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 18,000 மருத்துவர்கள் சம்பள உயர்வுக்காக வெறும் 310 கோடி கேட்டார்கள். இத்தொகை அரசுக்கு சாதாரணமானது. இத்தொகையைக் கொடுக்காமல் பணியிடை மாற்றம் செய்து பழி வாங்கினார்கள். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக மன அழுத்தத்தில் என் கணவர் இறந்துள்ளார். இந்த 4 மாதத்தில் 200 முறைக்கு மேல் சென்னை சென்றிருப்பார். இறுதியாகப் பணியிடை மாறுதலையாவது திரும்பப் பெறுங்கள் என்று கெஞ்சினார்.

சங்கம்
சங்கம்
எம். விஜயகுமார்

ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவர்களிடம் ஈகோ பார்த்து காக்க வைத்துப் பழி வாங்கினார். முதல்வருக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் குடும்பம் இருப்பதுபோல மருத்துவர்களுக்கு குடும்பம் இருக்கிறது. என் கணவர் இறந்தும் போராடி வருகிறார். என் கணவர் உடல் மீது மண் விழுவதற்கு முன்பு அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் என் கணவரின் உடலை வைத்துப் போராடுவோம்'' என்றார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ``மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுள்ளது. அது அவருக்கும் தெரியும். பணியிட மாறுதல் என்பது அரசு பணியாளர்களுக்கு இயல்பு. மருத்துவர்கள் யாருக்கும் மன உளைச்சலை கொடுக்கவில்லை" என்றார்கள்.

பின் செல்ல