Published:Updated:

கஜா புயல்: கலெக்டருக்கு ஓட்டிய கார் வாடகை கிடைக்கலை! தற்கொலைக்கு முயன்ற டிரைவர்

கார்
கார்

கஜா புயலின்போது கலெக்டருக்கு ஓட்டிய கார் வாடகை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கார் டிரைவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த அதிர்ச்சி சம்பவம் நாகை மாவட்டத்தில் நடந்துள்ளது.

கஜா புயலின்போது கலெக்டருக்கு வாடகைக் காரை இயக்கிய பாலாஜி என்பவருக்கு, இன்று வரை வாடகைப் பாக்கியாக சில லட்ச ரூபாய்களை அரசு அதிகாரிகள் தரவில்லை என்று தெரிகிறது. இதைக் கண்டித்து, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பாலாஜி என்ற டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலாஜி
பாலாஜி

நாகை உள்ளிட்ட தமிழகத்தின் 5 மாவட்டங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட கஜா புயலின் கோர தாண்டவத்தை யாரும் மறந்திருக்க இயலாது. சாலைப்போக்குவரத்து முதல் மின்சாரம் வரை அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் அடியோடு அழிந்த நிலையில், அப்போது கஜா புயல் நிவாரண சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார். அவரின் போக்குவரத்துக்கு வாகனம் தேவைப்பட்டது. அப்போதிருந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மூலம் பாலாஜி என்பவரின் புதிய இனோவா வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. சுமார் 70 நாள்கள் அந்த வாகனத்தை கலெக்டருக்காக இயக்கிய பாலாஜி தனது சொந்தப் பணத்திலேயே டீசலும் போட்டிருக்கிறார். அந்த வகையில் மொத்த ரூபாய் 3 லட்சம் வாடகைப் பணத்தை அரசுத் தரப்பு அதிகாரிகள் இன்றுவரை முழுமையாகத் தரவில்லை.

இதனால் விரக்தி அடைந்த பாலாஜி, `இன்றைய தேதியில் நான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்று அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்திருக்கிறார். அதற்கும் எந்தவித பதிலும் இல்லாததால், இன்று காலை நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டுத் தீக்குளிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து பாலாஜியிடம் பேசினோம். `எனது காரை வாடகைக்கு அழைத்தது நாகை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிதான். என் காரைப் பயன்படுத்தியது கஜா புயல் நிவாரண சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரதீப்குமார். எனக்கு வாடகையாக வர வேண்டியது ரூபாய் 3 லட்சம் பணத்தை வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டால், `கலெக்டரிடம் கேளுங்கள்’ என்கிறார். கஜா புயல் நிவாரண சிறப்பு கலெக்டர் பிரதீப்குமாரிடம் கேட்டால், `இதனை உங்கள் மாவட்ட கலெக்டரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். எனக்குத் தெரியாது. இது என் வேலை இல்லை' என்கிறார் இப்போதுள்ள மாவட்ட கலெக்டரிடம் கேட்டால், `இது எப்போதோ நடந்த விஷயம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்கிறார். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் காருக்கு போட்ட டீசல் பணம் ரூ.93,000 மட்டுமே கிடைத்தது. மீதியுள்ள 2.07 லட்ச ரூபாய் பணம் இன்று வரை வரவில்லை. இந்நிலையில்தான் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்தேன்’’ என்றார் வேதனையுடன்.

நாகை கலெக்டர் பிரவீண் நாயர்
நாகை கலெக்டர் பிரவீண் நாயர்

இதுதொடர்பாக நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகனிடம் தொடர்புகொண்டு கேட்டோம்.``இப்போது பேச முடியாது. நேரில் வாங்க" என்று கூறி தொடர்பைத் துண்டித்தார். தற்போது ராமநாதபுரத்தில் கூடுதல் கலெக்டராக உள்ள பிரதீப்குமாரிடம் கேட்டபோது, ``என்னிடம் பாலாஜி புகார் மனு அளித்தார். இதனைச் செட்டில் செய்ய வேண்டியது நாகை மாவட்ட வருவாய் துறையினர்தான். நான், நாகை கலெக்டருக்கு அனுப்பிவிட்டேன்" என்பதோடு முடித்துக்கொண்டார்.

இறுதியாக நாகை கலெக்டர் பிரவீண் நாயரின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றோம். ``பாலாஜி என்பவருக்கு வாடகைப் பாக்கி உள்ளது உண்மை. என் கவனத்திற்கு வந்தவுடன் கஜா புயல் நிவாரணப் பணம் எஞ்சியிருந்ததில் டீசல் பணத்தைத் தந்துள்ளோம். மீதிப் பணத்தைத் தருவதற்கு அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் அவருக்குரிய பணம் கிடைக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு