Published:Updated:

நாமக்கல்: சுடுகாட்டுக்குப் பாதையில்லை - தண்ணீரில் பிணத்தைச் சுமந்துசெல்லும் கிராம மக்கள்!

ஓடை வழியாக பிணத்தைச் சுமர்ந்துசெல்லும் மக்கள்
ஓடை வழியாக பிணத்தைச் சுமர்ந்துசெல்லும் மக்கள் ( எம். விஜயகுமார் )

`சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையின் குறுக்கே ஓடை இருப்பதால் வருடத்தில் பல மாதங்கள் தண்ணீர் தேங்கிக்கிடக்கும். இடுப்பளவு இருக்கும் தண்ணீருக்குள் இறங்கித்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.’

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் சொந்தத் தொகுதியான குமாரபாளையத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள், மயானத்துக்குச் செல்வதற்கு வழியில்லாமல் பிணத்தை முழங்கால் அளவு தண்ணீரில் சுமந்து செல்கிறார்கள். இது குறித்த போட்டோ, வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தண்ணீரில் பிணத்தைச் சுமந்து செல்லும் மக்கள்
தண்ணீரில் பிணத்தைச் சுமந்து செல்லும் மக்கள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்பாளையம் கிராமம், மேல்வளவு பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள்; பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலிகளாக இருந்துவருகிறார்கள். இவர்களுக்குத்தான் இப்படி ஒரு பரிதாப நிலை இருந்துவருகிறது.

இது பற்றி மேல்வளவு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், ``எங்க ஊருல பெரியவர்கள் விவசாயக் கூலிகளாகவும், இளைஞர்கள் பெயின்ட் அடிக்க, கட்டடம் கட்டும் பணி, சாயப்பட்டறைகளுக்கு வேலை என்று செல்கிறோம். எங்க ஊரில் யாராவது இறந்துவிட்டால் அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள எங்க சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.

கார்த்திக்
கார்த்திக்

ஆனால், சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையின் குறுக்கே ஓடை இருப்பதால் வருடத்தில் பல மாதங்கள் தண்ணீர் தேங்கிக்கிடக்கும். இடுப்பளவு இருக்கும் தண்ணீருக்குள் இறங்கித்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஓடையின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி கடந்த 30 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

`சுடுகாடு இல்லை; லஞ்சம் கொடுக்கணும்!' - உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் தூத்துக்குடி கிராமம்

நாங்க அமைச்சர், கலெக்டர், தாசில்தார், பஞ்சாயத்துத் தலைவர் என பலருக்கும் மனு கொடுத்திருக்கிறோம். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் எங்க ஊரைச் சேர்ந்த பொன்னி என்ற 75 வயது பாட்டி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவருடைய உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு செல்ல வழியில்லாமல் முழங்கால் அளவு தேங்கிக்கிடக்கும் நீரில் சுமந்து சென்றோம்’’ என்றார்.

புஷ்பா செல்லதுரை
புஷ்பா செல்லதுரை

இது பற்றி தட்டான்குட்டை பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பா செல்லதுரையிடம் கேட்டதற்கு, ``நீங்க சொல்லித்தான் இந்தத் தகவல் எனக்குத் தெரியும். உங்களுக்கு வந்த புகைப்படத்தையும், வீடியோவையும் எனக்கு அனுப்பிவையுங்கள். எங்கப்பாவிடம் கேட்டுட்டு உங்களைக் கூப்பிடுகிறேன்’’ என்றார்.

சற்று நேரத்துக்குப் பிறகு நம்மிடம் பேசிய பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பாவின் தந்தை செல்லமுத்து, ``சார் நான் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். எங்க பஞ்சாயத்தில் எல்லா சமுதாய மக்களின் சுடுகாடும் சூப்பரா இருக்கு. அந்தப் பட்டியலின மக்களின் சுடுகாடு மட்டும்தான் மோசமாக இருக்கு. அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறோம். அவரும் சுடுகாடு சிறப்பாக அமைத்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஓடையின் மீது மேம்பாலம் கட்ட வேண்டும். அதற்கு 60 லட்ச ரூபாய் தேவைப்படுவதால், சற்று காலதாமதம் ஏற்படுகிறது. விரைவாகச் செய்து கொடுத்துவிடுவோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு