Published:Updated:

`மருத்துவர்கள் இல்லை; பிரசவம் பார்க்கும் செவிலியர்கள்!' - கொதிக்கும் முதல்வர் தொகுதி மக்கள்

போராட்டம்
போராட்டம் ( எம். விஜயகுமார் )

முதல்வர் தொகுதியான எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் இருக்கும் ஐந்து மருத்துவமனைகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

``முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வருவதில்லை. ஆபரேஷன் தியேட்டர் இல்லை; ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை. இப்படி எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லை. பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றால் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன'' எனப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் நங்கவள்ளி மற்றும் வனவாசிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், நங்கவள்ளி முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவருமான ஜீவானந்தம் கூறுகையில், ``நங்கவள்ளியில் அரசு மேம்படுத்தப்பட்ட தாலுகா தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் கீழ் சந்தைதானம்பட்டி, கோம்புரான்காடு, வனவாசி, சவுரியூர் ஆகிய இடங்களில் நான்கு கிளை ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த ஐந்து மருத்துவமனைகளிலும் மொத்தம் 16 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஓரிரு மருத்துவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை.

கடலூர்: இட்லிக்குள் பல்லி! - அரசு மருத்துவமனை கொரோனா நோயாளி அதிர்ச்சி

மருத்துவர்கள் வராததால் கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு செவிலியர்களே பிரசவம் பார்க்கிறார்கள். அதனால் தாய், சேய் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகிறது. குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்போது உடனே அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுவதற்கு ஆபரேஷன் தியேட்டரும் இல்லை. மருத்துவர்களும் இருப்பதில்லை.

அவர்களை சேலம், மேட்டூர் மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், அங்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாத அவலநிலையே இங்கு இருக்கிறது. இதுதவிர இந்த ஐந்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு வந்தால் மருத்துவமனையில் மதிய உணவு வழங்க வேண்டும். ஆனால், உணவு வழங்குவதில்லை. இப்படிப் பல பிரச்னைகள் முதல்வர் தொகுதியிலுள்ள மருத்துவமனைகளில் இருக்கின்றன’’ என்றார்.

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

இது பற்றி நங்கவள்ளி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபனிடம் கேட்டதற்கு, ``எங்கள் வட்டார மருத்துவமனைகளில் 16 மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஏரியாவுக்குச் செல்லக்கூடியவர்கள், சித்த மருத்துவர்கள், டியூட்டி மருத்துவர்கள், தற்போது கோவிட் 19 சிகிச்சை கொடுக்கச் செல்லும் மருத்துவர்களும் அடங்குவர். இவர்களில் டியூட்டி மருத்துவர்கள் எப்போதும் டியூட்டியில் இருக்கிறார்கள். ஆபரேஷன் தியேட்டர் இருக்கிறது. முடியாதபட்சத்தில் மட்டுமே மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்வோம். மேச்சேரி, ஜலகண்டாபுரத்தில் ஆம்புலன்ஸ் வசதி இருக்கிறது. அழைத்தால் பத்து நிமிடங்களில் வந்துவிடும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு