Published:Updated:

`திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்'... அமைச்சரின் சொந்த ஊரிலேயே இந்த நிலையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
News
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வரும் நிதி ஒதுக்கீடுகளை உள்ளூர் அரசியல்வாதிகள் அபகரித்துக்கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published:Updated:

`திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்'... அமைச்சரின் சொந்த ஊரிலேயே இந்த நிலையா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வரும் நிதி ஒதுக்கீடுகளை உள்ளூர் அரசியல்வாதிகள் அபகரித்துக்கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
News
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதும் கிராமபுரங்களின் முன்னேற்றத்துக்காகப் பெருவாரியாக ஒதுக்கப்படும் நிதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிதிகளும் ஒன்று. தற்போது தூய்மை இந்தியா திட்டமும் வந்துவிட்டது.

அவ்வாறாக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையான திட்டங்கள் மூலம் கிராம மேம்பாட்டுக்கு செலவிடப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் மூலம் கணக்குகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

அதன் அடிப்படையிலேயே திட்டங்கள் செயல்படுத்தப் பட்டிருந்தாலும் யாருக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன எனும் கேள்வி மக்களிடம் எழும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் விழுப்புரம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பல இருந்தாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அவையனைத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டம் எனக் கூறப்படும் இத்திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைந்த காலம் மாறி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகள், கிராமப்புற பெரும்புள்ளிகள் பயனடையும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது எனலாம்.

நகர்ப்புறங்கள், நகராட்சி மூலம் முறையாகப் பராமரிக்கப்பட்டு குப்பைகள், கழிவுகள் அல்லப்படுவது போல் கிராமப்புறங்களிலும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கும் பொருட்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சி செய்வதற்கான பொருள்கள் எனத் தரம் பிரிக்கப்படும். மக்கும் குப்பைகள் அதற்கென தோண்டப்பட்ட குழிகளில் கொட்டப்பட்டு மக்கச் செய்யப்படும்.

மக்கிய குப்பைகள் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகளில் கொட்டப்பட்டு மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். பாலித்தீன் போன்ற பொருள்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலை அமைப்பது போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பெறப்படும் வருவாய் அரசின் உரிய வங்கி கணக்கில் செலுத்தப்படும் இவையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை
மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை

இதற்காக ஒவ்வோர் ஊராட்சியிலும் 1,00,000 ரூபாய் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையும் 90,000 முதல் 1,00,000 ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் குப்பை தரம் பிரிக்கும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக அமைக்கப்பட்ட இவை இன்றளவும் பயன்படுத்தப்படாமல் மது அருந்தும் நபர்களின் கூடாரமாகவும் பொதுமக்களின் கழிப்பிடமாகவும் மாறிவருகிறது.

குறிப்பாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான அவ்வையார்குப்பத்திலும் (விழுப்புரம் மாவட்டம்) இத்திட்டம் மற்ற கிராமங்களைப் போலவே செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படுவதால் மண்புழு உரம் மற்றும் குப்பை தரம் பிரித்தல் மையம் அமைப்பதற்கு 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள மக்களே ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு நடைமுறையே வேறு என்பதைச் சில கிராம மக்கள் கூறிய பின்தான் தெரியவந்தது.

"நாங்கள் 100 நாள் வேலைக்குச் சென்றே ஒரு வருடத்துக்கிட்ட ஆகப்போகிறது. இந்தக் குப்பை தரம்பிரிக்கும் கூடம் மட்டுமல்ல கால்நடை நீர் அருந்தும் தொட்டி, மழை நீர் சேகரிக்கும் அமைப்பு என எதையும் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் செய்வதில்லை. ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டிக்கொள்வார்கள். பின் ஊரிலுள்ள நெருக்கமானவர்களின் உதவியுடன் அரசுக்குக் கணக்கு காண்பித்து நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள்” என்றனர் வேதனையுடன்.

மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை
மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை

மண்புழு உரக்கூடம் தொடர்பாகத் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் முருகன் என்பவரிடம் பேசினோம்.

"பல்வேறு ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடம் அரசு சார்பில் கட்டப்பட்டிருந்தாலும் அவை பயன்பாட்டில் வராமல் இருப்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. அவற்றை ஒழுங்காகச் செயல்படுத்தினார்கள் என்றால் சிறப்பாக இருக்கும். ரசாயன உரம் பயன்படுத்தி மண்புழுக்கள் எல்லாம் இறந்துபோனதால் மண்வளம் குறைந்ததோடு, இன்று விளைவிக்கப்படும் அனைத்து உணவுப் பொருளும் விஷமாக மாறிவிட்டன. அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் விவசாய நிலங்களில் மண்புழு உரத்தைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்கியிருக்கலாம். மண்புழு உரக்கூடம் கட்டப்படாத இடங்கள் எண்ணிப்பார்க்கக்கூடிய அளவிலே இருந்தாலும் பெரும்பாலான ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடமும் தரம்பிரித்தல் மையமும் கட்டப்பட்டுள்ளன. ஆனால், துப்புறவு பணியாளர்களோ சரியாகச் செயல்படுவதில்லை. அதுமட்டுமன்றி பல ஊராட்சிகளில் இவற்றைக் கட்டிமுடிக்காமலே பணம் எடுத்துள்ளார்கள் எனும் தகவலையும் கேள்விப்பட்டேன்.

மண்புழு உரக்கூடம் செயல்படாமல் இருப்பது குறித்து சங்கத்தின் சார்பாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடமும் முரையிட்டுள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். பஞ்சாயத்து நிர்வாகம் ஒழுங்காகச் செயல்படாமல் உள்ளது. அதற்கு உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி ஊராட்சி தலைவர்கள் வரும்போது அவை ஒழுங்காகப் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்.

முருகன்
முருகன்

ஒவ்வோர் ஊராட்சி செயலாளரும் அப்பகுதியைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் நேராகச் சென்று பணிகளை கண்காணிப்பதில்லை. மாவட்ட ஆட்சியரே சொன்னாலும் கீழே இருக்கும் அதிகாரிகள் அதைக் கேட்பதில்லை. இன்று இயற்கை வேளாண்மை பெரிதும் தேவைப்படக்கூடிய ஒன்று. ஆகவே, மண்புழு உரத்தின் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்குவது என்பது அவசியமானது. அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை!" என்றார்.

இறுதியாக மக்களின் குற்றச்சாட்டுகளையும், விவசாயிகளின் கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சென்றோம். விழுப்புரம் மாவட்டத் தணிக்கையாளர் கோவிந்தன் என்பவரை சந்திப்பதற்கு நேரில் சென்றோம். முக்கிய வேலையாக மாவட்ட ஆட்சியருடன் சென்றிருந்ததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

"இது தொடர்பாக எனக்கு ஐடியா இல்லை. நீங்கள் அத்திட்டத்தைச் செயல்படுத்துபவர்களிடம்தான் பேச வேண்டும். அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்தியபின் அதைத் தணிக்கை செய்வதுதான் எங்களின் வேலை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பேசுங்கள்" என்று கூறி சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பின்னர் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சீனிவாசன் (APO) என்பவரை சந்தித்து பேசினோம்.

"மண்புழு உரக் கூடத்துக்கு கீற்றுகளில்தான் கூரை அமைப்பார்கள். அவை அண்மையில் பொழிந்த மழையால் பாதிப்படைந்துவிட்டன. அவற்றை மாற்ற வேண்டும். கீற்றை சரி செய்வதற்கு தற்போது நிதி இல்லாததால் நிலுவையில் உள்ளது. நிதி வந்ததும் சரி செய்துவிடுவார்கள். விழுக்கம் போன்ற இடங்களில் இத்திட்டம் செயல்பாட்டில்தான் உள்ளது. மண்புழு உரத்தை சரியான நேரத்தில் தயாரித்து பாக்கெட் செய்து விற்பனை செய்ய வேண்டும். குப்பையைத் தரம் பிரிப்பது என்பது வேறு துறையைச் சேர்ந்தது. மண்புழு உரம் தயாரித்தல் கூடம் மட்டுமே எங்கள் துறை. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சென்று பார்வையிடும்படி சொல்கிறேன்" என்றார். ஆனால், இன்று வரை செயல்படாமல் இருப்பது குறித்து ஏதும் கூறவில்லை.

அவரிடமே மக்களுடைய குறைகளை முன் வைத்தோம்.

"ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீடு உள்ள இத்திட்டத்தில் 60% மெட்டீரியலுக்கே செலவாகிவிடும். அதற்கு அனுமதி உள்ளது. பணியாளர்களைப் பொறுத்தவரை NREG அட்டை உள்ளவர்கள்தான் ஈடுபடுவார்கள். இந்தப் பணிக்கு அம்மக்களின் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருக்கும். அட்டை இல்லாதவர்கள் வேலை செய்ய முடியாது. NREG அட்டை உள்ளவர்கள் பணியில் ஈடுபடாமல் அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது. ஏனெனில், இன்று எல்லாமே ஆன்லைன்தான். இரண்டு வருடத்துக்கு முன்பாக சில இடங்களில் உரக்கூடம் கட்டியிருப்பார்கள். அதை மக்களே ஞாபகம் இல்லாமல் கூறியிருக்கலாம்" என்றார்.

மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை
மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை

ஆனால், மண்புழு உரக்கூடமும் குப்பை தரம்பிரித்தல் மையமும் கட்டப்பட்ட நாள்களிலிருந்து செயல்படுத்தப்படாமல் இருப்பதுதான் உண்மை. இவை மட்டுமன்றி, பல்வேறு ஊராட்சிகளில் பொதுக்கழிப்பிடம், கிராம சேவை மையம், கால்நடைகள் தண்ணீர் அருந்தும் தொட்டி என அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் பல பெரும்புள்ளிகள் பயன் அடைந்துள்ளதைத் தவிர மக்களுக்கு சிறிதளவு பயனும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்துக்காக 12,300 கோடியையும். மாநில அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிக்காக 29,915.84 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களின் வரிப்பணத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்தப் பட்ஜெட் நிதி வருங்காலங்களில் யாருக்குப் பயன்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.