Published:Updated:

பெண் ஊழியரின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்! - சர்ச்சையில் நெல்லை மாநகராட்சி

மருத்துவமனையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்
மருத்துவமனையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்

நெல்லை மாநகராட்சி குப்பை பிரிக்கும் இயந்திரத்தில் பணியாற்றிய தற்காலிகப் பணியாளரின் கை எதிர்பாராதவிதமாகச் சிக்கியதில் கை துண்டானது. அவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நெல்லை மாநகராட்சியில், ஐந்து லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 109 சதுர கி.மீ பரப்பளவுள்ள நெல்லையில், தினமும் 160 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. ராமையன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்தப் பகுதிகளிலேயே குப்பையைத் தரம் பிரித்து உரமாக்கும் முயற்சி நடக்கிறது. 

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். மாநகராட்சியின் நுண்ணுயிர் உரக்கிடங்கில் உரம் தயாரிக்கும் பணியிலும் அவர் ஈடுபடுவது வழக்கம்

Vikatan

என்ஜிஓ காலனி பகுதியில் அமைந்துள்ள குப்பைகளைப் பிரித்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணியில் 28-ம் தேதி பாக்கியலட்சுமி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில், உரம் தயாரிக்கும் இயந்திரத்தில் கை சிக்கியது. அதில் அவரது வலது கை துண்டானது. 

விபத்துல் சிக்கிய பாக்கியலட்சுமி
விபத்துல் சிக்கிய பாக்கியலட்சுமி

ரத்தவெள்ளத்தில் கிடந்த பாக்கியலட்சுமியை அருகில் பணியில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துண்டான கை, சிதைந்துவிட்டதால் அதை ஒட்டவைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

பாக்கியலட்சுமியின் நிலைக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமான நடவடிக்கையே காரணம் என ஒப்பந்தப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதனால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சியில் நிரந்தரப் பணி கொடுக்க வேண்டும் என்றும் 300-க்கும் அதிகமான ஒப்பந்தப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

போராடும் பணியாளர்கள்
போராடும் பணியாளர்கள்

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இயந்திரத்தை இயக்கத் தனிப்பட்ட முறையில் மெஷின் ஆபரேட்டர்களை மாநகராட்சி நிர்வாகம் நியமிக்காததாலேயே ஒப்பந்தப் பணியாளர்கள் அதை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கடினமான இந்தப் பணியில் ஆண்களைப் பயன்படுத்தாமல் பெண் பணியாளர்களைப் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நெல்லை: `போலீஸ் அடித்ததில்  இளைஞர் மரணம்?' - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இயந்திரத்தை முறையாக இயக்கத் தூய்மைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படாததன் விளைவே இந்த விபத்துக்கு காரணம் எனவும் நெல்லை மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

மருத்துவமனை வாயிலில் கவலையுடன் பணியாளர்கள்
மருத்துவமனை வாயிலில் கவலையுடன் பணியாளர்கள்

ஏற்கெனவே ஒரு பெண்ணுக்கு கால் போயிருப்பதாகத் தெரிவிக்கும் ஒப்பந்தப் பணியாளர்கள், இத்தகைய ஆபத்தான பணியில் ஈடுபடும் தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் காப்பீடு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு