Published:Updated:

`ஹெல்மெட் அணியாமல் டூவிலர் பயணம்; வைரல் போட்டோ' - நெல்லை காவலருக்கு அபராதம்!

திருநெல்வேலியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்ற காவலர்
ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்ற காவலர்

நெல்லை மாநகர காவல்துறை சார்பாக `மக்களைத் தேடி மாநகர காவல்’ திட்டம் மூலமாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான உறவுப் பாலத்தை வலுவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நெல்லை காவல்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையர்
நெல்லை காவல்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையர்

`மக்களைத் தேடி மாநகர காவல்’ என்னும் புதுமையான திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக நெல்லை மாநகர காவல்துறைக்கு பெருமைக்குரிய `ஸ்கோச்’ விருது கிடைத்திருக்கிறது. மாணவர்களிடம் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெற்றோருக்கு ஹெல்மெட் அவசியம் குறித்து எடுத்துக்கூறும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகர காவல்துறை மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் தலைக்கவசம் அணியாமல் யாருமே பயணிப்பதில்லை என்கிற நிலை எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாளையங்கோட்டை பகுதியில் ஒரு காவலர் சீருடையுடன் தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற படம் வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவியது. 

துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!

இது குறித்த தகவல் துணை ஆணையர் சரவணனுக்குக் கிடைத்ததும் அந்தப் படத்தில் இருந்த பைக்கின் நம்பரை வைத்து காவலரை அடையாளம் காண நடவடிக்கை எடுத்தார். அத்துடன், அந்த காவலருக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

`பேனருக்குப் பதிலாக அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா!' - மாத்தியோசித்த நெல்லை விஜய் ரசிகர்கள்

இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், ``வாகன விபத்துகளின்போது தலைக்கவசம் அணியாததால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கையில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோதர், துணை ஆணையர் சரவணன் ஆகியோர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். 

அபராதம் விதிப்பு
அபராதம் விதிப்பு

இந்த ஆண்டு ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்பதற்காக 100 சதவிகிதம் வாகன ஓட்டிகளும் தலைக்கவம் அணியும் அளவுக்கு நிலைமையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், காவலர் ஒருவரே ஹெல்மெட் அணியாமல் சென்றதை அறிந்ததால் அவருக்கு அபராதம் விதிக்க துணை ஆணையர் சரவணன் உத்தரவிட்டார். அத்துடன், அவரை நேரில் அழைத்து வருங்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது என்ற அறிவுரையும் வழங்கினார்’’ என்றார்கள்.