Published:Updated:

`ஓய்வூதியப் பணத்தில் பிடித்தம் செய்யப்பட்ட கடன்?'- சர்ச்சையில் அரசு அலுவலர்கள் சங்கம்

அரசு அலுவலர்களின்  சங்க அலுவலகம்
அரசு அலுவலர்களின் சங்க அலுவலகம் ( ம.அரவிந்த் )

இன்ஷூரன்ஸ் தொகை கட்டப்படாததால் தற்போது கூட்டுறவுத்துறையிலிருந்து சாரதாம்பாளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடன் தொகையை ஓய்வூதியப் பணத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள அரசு அலுவலர்களுக்கான கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தில் நிர்வாகிகளாகப் பதவி வகிப்பவர்கள் சங்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியமாகச் செயல்படுவதால் உறுப்பினர்கள் பாதிக்கபடுவதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலர்களின்  சங்க அலுவலகம்
அரசு அலுவலர்களின் சங்க அலுவலகம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட அரசு அலுவலர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம். தஞ்சாவூரில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகத்தில் இதன் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. 1,500 பேர் உறுப்பினராக உள்ள இச்சங்கத்தின் தலைவராக தங்க.பிரபாகரன் இருந்து வருகிறார். இதற்கிடையே அரசு அலுவலர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அலட்சியமாக சங்கம் செயல்படுவதாக உறுப்பினர்கள் பலர் புகார் கூறி வருகின்றனர்.

இது குறித்து சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசியதாவது, ``மூன்று மாவட்ட அரசு ஊழியர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது இந்தச் சங்கம். கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் சங்கத்தில் அரசு அலுவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெறும் அலுவலர்கள் கடனைக் கட்டி முடிப்பதற்குள் இறக்க நேரிட்டால் அந்தத் தொகையை இன்ஷூரன்ஸிலிருந்து பிடித்துக்கொள்ளும் வகையில் கடன் பெறும் நபரின் பெயரில் இனஷூரன்ஸும் போடப்படுகிறது.

அரசு அலுவலர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில், அரசு அலுவலகங்களில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களே நிர்வாகிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் மன்னார்குடியைச் சேர்ந்த சாரதாம்பாள் அதே பகுதியில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் இரவு நேரக் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவருக்கு கணவர் கிடையாது என்பதால் சாரதாம்பாளை நம்பியே அவரின் குடும்பம் உள்ளது. இவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையும் கட்டி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்துவிட்டார்.

ஒவ்வொரு வருடமும் கடனுக்கான இன்ஷூரன்ஸ் தொகையை சங்கத்தில் செலுத்தி புதுப்பிக்க வேண்டும் என்பதால் சாரதாம்பாள் தனக்கான பணத்தைக் கொடுத்தபோதிலும் தங்க.பிரபாகரன் குறித்த நேரத்தில் பணத்தைச் செலுத்தவில்லை. அதற்குள் சாரதாம்பாள் இறந்துவிடுகிறார். அவருக்கான இன்ஷூரன்ஸ் தொகை கட்டப்படாததால் தற்போது கூட்டுறவுத்துறையிலிருந்து சாரதாம்பாளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடன் தொகையை ஓய்வூதியப் பணத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த சதாசிவம் என்பவரும் இறந்துவிட்டார். அவருடைய கடன் தொகைக்கான காப்பீட்டுப் பணத்தையும் செலுத்தாததால் அவருக்கும் ஓய்வூதிய தொகை பிடிக்கப்பட உள்ளது. குடும்பத் தலைவர் இறந்த பிறகு, அவர்களின் ஓய்வூதியப் பணத்தை நம்பித்தான் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கும். ஆனால், பாதிக்கபட்ட அந்த இரண்டு பேரின் ஓய்வூதியப் பணமும் கடனுக்குப் பிடித்தம் செய்யப்பட உள்ளது வேதனையளிக்கிறது. அரசு அலுவலர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில், அரசு அலுவலகங்களில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களே நிர்வாகிகளாக உள்ளனர்.

தலைவருக்கு எதிரான தீர்மானம்
தலைவருக்கு எதிரான தீர்மானம்

ஆனால், அவர்களே அலட்சியத்துடன் செயல்படுவதால்தான் இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது என்றதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியப் பணத்தை முழுமையாகப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுதொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம், ``நான் பொறுப்பேற்பதற்கு முன்பே இது நடந்துவிட்டது" என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

இது தொடர்பாக தங்க.பிரபாகரனிடம் பேசியபோது, ``சங்கத்தில் தற்காலிக எழுத்தராகப் பணிபுரியும் சக்திவேல் என்பவர் செயலாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்தார். அவர் தன் வேலையை சரியாகச் செய்யாததால் இந்தத் தவறு நடந்திருக்கிறது. எனவே, அவரிடமிருந்து இதற்கான பணத்தைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க உள்ளோம். நான் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இ.சி.எஸ் முறையில் வங்கியின் மூலம் செலுத்தும் முறையைக் கொண்டு வந்தேன். அதுமட்டுமல்லாமல் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தேன். மேலும், சங்கம் லாபத்தில் செயல்படும் வகையில் மாற்றியமைத்தேன். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சக்திவேல் மற்றும் முன்னாள் தலைவரான கருணாநிதி ஆகியோர் காழ்ப்புணர்ச்சியுடன் நான் சரியாகச் செயல்படவில்லை எனப் புகார் கூறி வருகின்றனர். அவை உண்மை இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு