Published:Updated:

ஊட்டி: `கோயில் சர்ச்சை; மாற்றப்பட்ட ஆர்.டி.ஓ!’ - சர்ச்சையில் அ.தி.மு.க புத்திசந்திரன்

ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்
ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்

`கோயிலைத் திறந்து பூஜை செய்ய வேண்டும்னு வலியுறுத்தினார். இது  கலெக்டரின் கவனத்துக்கும் போனது. ஒரு கட்டத்துல திருவிழா நடத்துறத தன்னோட கௌரவப் பிரச்னையா எடுத்துக்கிட்டார்.’

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட்டம் ஊட்டி வருவாய் கோட்டத்தின் கோட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் சுரேஷ். ஊட்டி நகரின் நீண்ட கால பிரச்னையான பார்க்கிங் தள பிரச்னைக்காக ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்  கையகப்படுத்தும் பணியைச் சிறப்பாக மேற்கொண்டது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவலாஞ்சியில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத பெருமழையால் நிலைகுலைந்த அவலாஞ்சியை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து என தனது செயல்பாட்டால் ஊட்டி மக்களிடம் வரவேற்பைப் பெற்றவர்.

ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்
ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்குமுன்  திடீரென ஊட்டி ஆர்.டி.ஒ பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தத் திடீர் நடவடிக்கை ஊட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நல்ல முறையில் பணியாற்றிக்கொண்டிருந்த கோட்டாட்சியர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தோம். கோட்டாட்சியர் பதவியில் இருந்து சுரேஷ் விடுவிக்கப்பட்ட பின்னணி குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை பணியாளர் ஒருவர்,``நாங்க எல்லோருமே கொரோனா தடுப்பு வேலைல தீவிரமாக இருந்தோம். அப்போது ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரா இருந்த புத்திசந்திரன், கீழ்குந்தா பகுதியில உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவ நடத்த ரொம்பவே முயற்சி பண்ணினார்.

அ.தி.மு.க
அ.தி.மு.க

ஆனா, `கிராமப் பகுதிகளில் உள்ள கோயில்கள மட்டுமே திறக்க அனுமதி இருக்கு. நகர், பேரூராட்சில கோயில் திறக்க அனுமதி இல்ல. இதனால அனுமதிக்க முடியாது’னு ஆர்.டி.ஓ அனுமதி கொடுக்கல. பண்டிகை கொண்டாட அனுமதி வேண்டும்னு தாசில்தார்கிட்ட லெட்டர் கொடுத்தார். `கண்டிப்பா கோயிலைத் திறந்து பூஜை செய்ய வேண்டும்’னு வலியுறுத்தினார்.

இது கலெக்டரின் கவனத்துக்கும் போனது. ஒரு கட்டத்துல திருவிழா நடத்துறத தன்னோட கௌரவ பிரச்னையா எடுத்துக்கிட்டார் புத்திசந்திரன். உடனே, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரை தொடர்பு கொண்டு, `ஊட்டி ஆர்.டி.ஒ ஆளுங்கட்சியினருக்கு எதிராகச் செயல்படுவதாகவும், இதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, ஆர்.டி.ஓ-வை மாத்தணும்’னு சொல்லிருக்கார். அடுத்த நாள் இரவே இவரை பணியில் இருந்து விடுவிச்சதா அறிவிச்சிட்டு, வேற மாற்றிடமும் போடாம விட்டுட்டாங்க. அதே வாரத்துல மாவட்ட செயலாளரையும் மாத்திட்டாங்க. ஆனா, ஆர்.டி.ஓ சுரேஷ் இப்போ அந்தரத்தில் இருக்கார்’’ என்றார்.

புத்திச்சந்திரன்
புத்திச்சந்திரன்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆளுங்கட்சி நீலகிரி நிர்வாகிகளிடம் பேசினோம். ``கீழ்குந்தா பகுதியில் உள்ள கோயிலில் கடந்த வாரத்தில் மூன்று நாள்கள் திறந்து பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கொரோனா பாதிப்பு உள்ள இந்தச் சமயத்தில் முன்னெடுத்த விவகாரம் தலைமை வரை பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தலைமையில் பேசி விரைவில் ஆர்.டி.ஓ விவகாரத்தில் நல்ல தீர்வு காணப்படும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு