Published:Updated:

கொரோனா: தப்லீக் மாநாட்டில் 9 சீனர்கள் பங்கேற்பா?! -மவுலானா சாத் மீது கொலை வழக்கு பதிவு

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு
தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு

மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேரில் 1,100 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் பங்கேற்ற 1,900 பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா ஆசாத் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. நிஜாமுதீன் மார்க்கஸில் நடத்திய மாநாட்டில், பங்கேற்ற ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்ததால், இத்தகைய நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உட்பட 9,000 பேர் பங்கேற்றுள்ளனர். டெல்லி அரசு 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் தப்லீக் மாநாடு நடத்தப்பட்டதால், நாடு முழுக்க கொரோனா பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற எத்தியோப்பியாவைச் சேர்ந்த 8 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மற்றொரு அதிர்ச்சித் தகவலாக கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவிய சீனாவிலிருந்தும் 9 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா
கொரோனா

மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேரில் 1,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் பங்கேற்ற, 1,900 பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். இதனால், இந்த அமைப்பின் தலைவரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான மவுலானா சாத் மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலையில் ஈடுபட்ட பிரிவின்கீழ் (ஐ.பி.சி 304) வழக்கு பதியப்பட்டுள்ளது. எனினும், இன்றுவரை அவரை டெல்லி போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. தலைமறைவாக உள்ள மவுலானா சாத் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களைக் கண்டுபிடிக்க பல மாநில அரசுகள் இன்னும் திணறிக் கொண்டிருக்கின்றன.

மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ``தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 58 பேரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தாங்களாகவே முன்வந்து அவர்கள் பரிசோதனைக்கு உட்படவில்லை. செல்போனையும் அணைத்து வைத்துவிட்டனர். அதில், 40 பேரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி விட்டோம். இன்னும் 18 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை '' என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்திலும் தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இங்கு, ``தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5,000 பரிசு அளிக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும்'' என்று போலீஸ் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சித்ரகூத் பகுதியில் நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த 36 பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 78 பேர் கண்டறிந்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலும் கொரோனாவால் இறந்த முதல் நபர் தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்தான். தற்போது, தாராவியில் 7 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில், 57 பேருக்கு இந்தத் தொற்று பரவியுள்ளது.

கொரோனாவால் மரணம்
கொரோனாவால் மரணம்
AP

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் கமால் ஃபாருக்கி கூறுகையில், ``தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன் வந்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத், மறைந்து ஓடுவதை விடுத்து வெளியே வந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். தன் தவற்றுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

தப்லீக் மாநாட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 370 பேர் அதிகமாகப் பங்கேற்றுள்ளனர். வங்கதேசத்திலிருந்து 110 பேர் மலேசியாவிலிருந்து 75 பேர், மியான்மரிலிருந்து 63 பேர், கிரிகிஸ்தானிலிருந்து 77 பேர், தாய்லாந்திலிருந்து 65 பேர், இலங்கையிலிருந்து 33 பேர், இரானிலிருந்து 24 பேர், கஜகஸ்தானிலிருந்து 14 பேர், வியட்நாமிலிருந்து 12 பேர், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து 10 பேர் பிற நாடுகளிலிருந்து மொத்தம் 98 பேர் பங்கேற்றுள்ளனர்.

`கொரோனா பரவல்; ஆடைகளில் வேண்டும் அதிக கவனம்!' -மருத்துவர் பகிரும் 10 டிப்ஸ் #DoctorAdvise

இவர்களில் விசா நடைமுறைகளை மீறியவர்களைத் திருப்பி அனுப்பும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. கொரோனா நோய் நாடு முழுவதும் கட்டுக்குள் வந்தபிறகு, இவர்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படுமென்றே சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு