Published:Updated:

சிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா?!- நிர்மலாவின் பேச்சால் கொதிக்கும் தமிழக தலைவர்கள்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சரஸ்வதி சிந்துசமவெளி நாகரிகம் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தார். முதலில் தவறாக கூறியிருப்பார் என்றுதான் தமிழக எம்.பி-க்கள் நினைத்திருந்தனர்.

நேற்று நடந்த பட்ஜெட் உரையில் ஆதிச்சநல்லூர் பற்றி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். ஆதிச்சநல்லூர் உட்பட இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஆனால், இதைக் குறிப்பிடுவதற்கு முன்பு நிர்மலா சிந்துசமவெளி நாகரிகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு அவையிலேயே தமிழக எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் சிந்துசமவெளி நாகரிகத்தை நிர்மலா, சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று குறிப்பிட்டதுதான். இருப்பினும், சரஸ்வதி சிந்துசமவெளி நாகரிகம் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தார். முதலில் தவறாக கூறியிருப்பார் என்றுதான் தமிழக எம்.பி-க்கள் நினைத்திருந்தனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஆனால் நிர்மலா, அதை அழுத்தமாக பதிவு செய்யவே எம்.பி-க்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் பட்ஜெட் உரையை வாசித்துவந்தார். அதில், ``சரஸ்வதி சிந்து நாகரிகத்தின் பட்டறைகளும், ஹரப்பன் முத்திரைகளும் குறிப்பிடத்தக்கவை. சரஸ்வதி சிந்து நாகரிகம் சுமார் கி.மு 4000-வது ஆண்டுக்கு முற்பட்டது.

குறிப்பாக இந்த முத்திரைகள் கி.மு 3300-வது ஆண்டைச் சேர்ந்தவை. `ஷ்ரேனி' என்றால் `பட்டறை' என்றும் முத்திரையில் காணப்படும் `சேட்டி' எனும் சொல்லுக்கு மொத்த வியாபாரி' என்றும் பொருள், `பொத்தார்' எனும் சொல்லின் பொருள் `கருவூலத்தில் கனிமங்களின் அளவை மதிப்பிடுபவர்' என்று கண்டறியப்பட்டுள்ளது.

சரஸ்வதி சிந்து நாகரிகத்திலிருந்து வரும் சொற்கள் அனைத்தும் ஹைரோகிளிஃபிக்ஸ் ஆகும். இதுபோன்ற சுவாரஸ்யமான சொற்கள் மூலம் நாம் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழில்துறையை அறிந்துகொள்ள வேண்டும். உலோகம் மற்றும் வர்த்தகம் மற்றும் பலவற்றில் திறமையான திறன்களைக் கொண்ட இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியான நாகரிகமாக இருந்து வருவதை வார்த்தைகள் காட்டுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இத்தகைய தொழில்கள் இருந்துள்ளது தெரிகிறது. தொழில் முனைவுதான் இந்தியாவின் வலிமை. அதுவே இது சிந்து-சரஸ்வதி நாகரிகம்" என்று குறிப்பிட்டவர் சரஸ்வதி சிந்து நாகரிகத்தையொட்டிய ஹரப்பா காலத்தைய பகுதியான அகமதாபாத் அருகில் உள்ள லோதலில் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

சிந்து சமவெளி நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்

சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இது, சிந்து நதியை ஒட்டிய பகுதி என்பதால், இங்கிருந்தவர்கள் சிந்து சமவெளி மக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்களைப் பிற்காலங்களில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நாகரிகம் திராவிடர்களைச் சேர்ந்ததா அல்லது ஆரியர்களைச் சேர்ந்ததா என்ற சர்ச்சையும் தொடர்கிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகளின் மொழி என்ன என்பது இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

அதேநேரம் சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம், திராவிட நாகரிகம் என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் ஆகிய ஆய்வாளர்கள் மேற்கோள்காட்டிய கூற்றை வைத்து கூறப்பட்டு வருகிறது.

அப்படி இருக்கையில் நிர்மலா அதை வேத காலத்தில் கற்பனை நதியாக குறிப்பிடப்பப்பட்ட சரஸ்வதி நதியை இணைத்து சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று பேசியிருக்கிறார். நிர்மலாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

``நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார். சிந்துவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கிறார்.

``சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார். வேதப் பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குரல் அவையில் எதிரொலிக்கிறது" என்று எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதேபோல் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பில் தீவிரம் காட்டிவரும் மத்திய பாரதிய ஜனதா அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் சூட்டி கீழடியில் கிடைத்த தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும், தீர்க்கவும் முயல்வதை தமிழகம் பொறுத்துக்கொள்ளாது" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு