Published:Updated:

அடிப்படை வசதிகளற்ற தனிமை முகாம்கள்; சுவரை உடைத்துத் தப்ப முயன்ற நபர்கள்! ராமநாதபுரம் அதிர்ச்சி

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி

வெளிமாவட்டங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் வருபவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் வேலைக்காகச் சென்று ஊரடங்கிற்கு இடையே சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டவர்கள் இந்த முகாம்களில் 14 நாள்கள் தனிமைபடுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி வெளியூர்களிலிருந்து ராமநாதபுரம் வருபவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை. இதனால் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் சுவரை உடைத்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் கொரோனா முன் தடுப்பு முகாம்.
ராமநாதபுரம் கொரோனா முன் தடுப்பு முகாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, திருவாடானை, பரமக்குடி, பார்த்திபனூர், சாயல்குடி, கமுதி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் வருபவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் வேலைக்காகச் சென்று ஊரடங்கிற்கு இடையே சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டவர்கள் இந்த முகாம்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியிருப்போருக்கு அடிப்படை வசதிகளோ, போதுமான மருத்துவ வசதிகளோ செய்துதரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் திருவாடனை அரசுக் கல்லூரியில் உள்ள முகாமில் கொரோனா பாதித்தவர்களுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் தங்க வைத்திருந்ததாகவும், இதனால் தங்களுக்கும் கொரோனா தொற்று பரவும் என மற்றவர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

உடைக்கப்பட்ட ஜன்னல் கிராதி
உடைக்கப்பட்ட ஜன்னல் கிராதி

இதனிடையே சுமார் 19 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை எனவும், கருவேல மரங்களுக்கு இடையே அமைந்துள்ள இங்கு கொசுக்கடி, விஷ சந்துக்கள் நடமாட்டம் போன்ற அச்சத்துடன் தங்கியிருப்பதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது. இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் கல்லூரியில் தங்கியிருந்த சிலர் கல்லூரி ஜன்னல் கிராதிகளை உடைத்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கருவேல முள் தடுப்புப் பணி
கருவேல முள் தடுப்புப் பணி

இதனை அறிந்த போலீஸார் அவர்களை எச்சரிக்கை செய்து மீண்டும் தனிமை முகாமில் தங்க வைத்தனர். மேலும், உடைக்கப்பட்ட ஜன்னல் கிராதிகளின் இடைவெளியில் கருவேல முட்களைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர். ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு